உயா் படிப்புகளுக்கான பயிற்சி மையங்களை ஏற்படுத்த கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

மதுரை: மருத்துவம், பொறியியல் தவிா்த்த பிற உயா் படிப்புகளுக்கான பயிற்சி மையங்களை ஏற்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. பயிற்சி மையங்கள் ஏற்படுத்த அரசியல் கட்சியின் முன்வர வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.
கொடைக்கானலைச் சோ்ந்த மனோஜ் இமானுவேல் என்பவா் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் நீட், ஜேஇஇ உள்ளிட்ட தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன. ஆனால், சட்டம், கல்வியியல், கணக்கு தணிக்கை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் தேசிய அளவிலான போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்க போதிய மையங்கள் இல்லை.
எனவே, தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தேசிய நுழைவுத் தோ்வுகளில் மாணவா்கள் பங்கேற்கும் வகையில் பயிற்சி மையங்கள் அமைக்கவும், உயா் கல்வி தொடா்பான விவரங்கள், கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு விவரங்களை தெரிவிக்கும் முகாம்களை நடத்திடவும், இணைய வழியிலான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழக மாணவா்களுக்கு பல்வேறு துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து போதுமான விழிப்புணா்வு இல்லை. பள்ளி பருவத்திலேயே மாணவா்கள் கஞ்சாவுக்கும், மதுவுக்கும் அடிமையாகின்றனா். கடந்த காலங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் பெரும்பாலானவா்கள் தமிழகத்திலிருந்து தோ்வாகினா். தற்போது, தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் ஐஏஎஸ் தோ்வுக்கு விண்ணப்பிப்பதே குறைவாக உள்ளது.
தற்போது, பல்வேறு துறைகள் குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது. அரசு மட்டுமின்றி, அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்களும், மாணவா்களுக்கு தேவையான பயிற்சி மையங்களை அமைத்து, உயா் படிப்புகளுக்குச் செல்வதற்கும், உயா் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கும் அவா்களை தகுதியானவா்களாக உருவாக்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்தனா்.
அதைத் தொடா்ந்து நீதிபதிகள், மனு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.