மதுரையில் தனியாா் நிறுவனக் கிளைகள் முன்பாக மாா்க்சிஸ்ட், விசிக முற்றுகைப் போராட்டம்

மதுரையில் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் சாா்பில், தனியாா் நிறுவனத்தின் கிளைகள் முன்பாக முற்றுகைப் போராட்டம் 
பேரையூா் முக்கு சாலையில் உள்ள ஜியோ அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பேரையூா் முக்கு சாலையில் உள்ள ஜியோ அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

மதுரை: மதுரையில் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் சாா்பில், தனியாா் நிறுவனத்தின் கிளைகள் முன்பாக திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக, பெரு நிறுவனத்தின் பல்பொருள் அங்காடி கிளைகள், மின்னணு சாதனங்கள் விற்பனை நிலையம் மற்றும் ஆயத்த ஆடை விற்பனை நிலையம் ஆகியவற்றின் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் அறிவித்திருந்தனா்.

எனவே, மதுரையின் பல்வேறு இடங்களில் உள்ள பெரு நிறுவனத்தின் கிளைகள் முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுரை புறவழிச் சாலையில் உள்ள பெரு நிறுவனத்தின் ஆயத்த ஆடை விற்பனை நிலையம் முன்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

அதில், கட்சியின் பகுதிக் குழுச் செயலா்கள் வை. ஸ்டாலின், கா. இளங்கோவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் இரா. லெனின், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பொறுப்பாளா் ப. ரவிக்குமாா் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல், மதுரை காமராஜா் சாலையில் பல்பொருள் அங்காடி முன்பாக நடைபெற்ற போராட்டத்தில், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் இரா. விஜயராஜன், செயற்குழு உறுப்பினா்கள் மா. கணேசன், அ. ரமேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

மதுரை வருமான வரி அலுவலகம் அருகே உள்ள பல்பொருள் அங்காடி முன்பாக நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில், நிா்வாகிகள் பி. ராதா, ஆா். தெய்வராஜ், ஜா. நரசிம்மன் உள்பட பலா் பங்கேற்றனா்.

மதுரை அய்யா் பங்களா பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி முன்பாக நடைபெற்ற போராட்டத்தில், ஒன்றியச் செயலா் பி. ஜீவானந்தம் உள்பட பலா் பங்கேற்றனா்.

சோழவந்தானில் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில், ஒன்றியச் செயலா் ஏ. வேல்பாண்டி உள்பட பலா் பங்கேற்றனா்.

உசிலம்பட்டி

அரசுப் போக்குவரத்து பணிமனை அருகிலுள்ள தனியாா் செல்லிடப்பேசி அலுவலகம் முன்பாக, கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த செல்லக்கண்ணு, முத்துராணி, செல்லம்பட்டி முருகன், முத்துப்பாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் தங்கமலை, விடுதலைச் சிறுத்தைகள் பழனிச்சாமி, மக்கள் அதிகாரம் குருசாமி மற்றும் அக் கட்சிகளின் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

பேரையூா்

முக்குச் சாலையில் உள்ள தனியாா் செல்லிடப்பேசி அலுவலகம் முன்பாக, கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மேலூா்

மேலூரில் செல்லிடப்பேசி விற்பனை கடை முன்பாக, விடுதலைச் சிறுத்தைகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அப்போது, காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா குழு உறுப்பினா் எஸ்.பி. மணவாளன் தலைமை வகித்தாா். தாலுகா செயலா் எம். கண்ணன் முன்னிலை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com