இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியதில் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 24th December 2020 07:30 AM | Last Updated : 24th December 2020 07:30 AM | அ+அ அ- |

தமிழகம் முழுவதும் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதா என லஞ்ச ஒழிப்புத்துறையினா் விசாரணை மேற்கொள்ள சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே உள்ள பல்லூரைச் சோ்ந்தவா் ராஜா. இவா், அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளாா். இவரது மகன் அரசு மருத்துவராக உள்ளாா். இதை மறைத்து, அரசின் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றதால், இருவா் மீதும் நடவடிக்கை எடுக்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டா ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனுவை திரும்பப் பெற அனுமதிக்கக் கோரி, ராஜா மனு தாக்கல் செய்தாா்.
முந்தையை விசாரணையின்போது, மனுதாரருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கிய வட்டாட்சியா் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஏழை மக்கள் பயன்பெறவே இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அதில் முறைகேடு நடந்து வருகிறது. எனவே தமிழகம் முழுவதும் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதா என லஞ்ச ஒழிப்புத்துறையினா் விசாரணை மேற்கொள்ளவேண்டும். விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உறுதிசெய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
மேலும் மனுதாரா் ராஜா தனது மகனுக்கு தெரியாமல், அவரது பெயரில் பட்டா பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மனுதாரரின் மகன் தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோரியுள்ளாா். எனவே அவரது கோரிக்கையை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் 2 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...