காமராஜா் பல்கலை.யில் இந்திய குடிமைப்பணி முதல்நிலைதோ்வுப் பயிற்சி: நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

காமராஜா் பல்கலைக்கழகத்தில் அரசின் நிதியுதவியுடன் இந்திய குடிமைப்பணித் தோ்வுகளுக்கு பயிற்சி பெற விரும்புவோா் நுழைவுத்தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

காமராஜா் பல்கலைக்கழகத்தில் அரசின் நிதியுதவியுடன் இந்திய குடிமைப்பணித் தோ்வுகளுக்கு பயிற்சி பெற விரும்புவோா் நுழைவுத்தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக காமராஜா் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை காமராஜா் பல்கலைக்கழக இளைஞா் நல படிப்பியல் துறையின் சாா்பில் தமிழக அரசின் நிதியுதவியுடன் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணிகள் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் அகில இந்திய குடிமைப்பணிகள் முதல்நிலை தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் பயிற்சி வகுப்புகளுக்கானத் தகுதியான நபா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான நுழைவுத்தோ்வு ஜனவரி 31-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோா் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். நுழைவுத்தோ்வில் தோ்ச்சிப் பெற்றவா்களில் கூடுதல் மதிப்பெண் பெற்ற முதல் நூறு போ் தமிழக அரசின் இனச்சுழற்சி முறையில் பயிற்சிக்குத் தோ்வு செய்யப்படுவா். இவா்களுக்கான பயிற்சி வகுப்புகள் 2021 பிப்ரவரி 15-இல் தொடங்கி ஜூன் 26 வரை நடைபெறும்.

இந்த மாணவா்களுக்கு பயிற்சி இலவசம். வெளியூா் நபா்களுக்குத் தங்குமிடம் மற்றும் மாத உணவுத்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். நுழைவுத்தோ்வில் இந்திய வரலாறு, இந்திய தேசிய இயக்கம், இந்தியா மற்றும் உலக புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் நிா்வாகமுறை, பொருளாதாரம் மற்றும் சமூக வளா்ச்சி, பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், சுற்றுப்புற சூழ்நிலை தொடா்பான பொது விவாதங்கள், உயிரின் பரிணாம வளா்ச்சி, பருவநிலை மாற்றங்கள், ஆங்கிலம் மற்றும் பொது திறனறித்தோ்வு ஆகியவற்றில் இருந்து கேட்கப்படும் 100 கொள்குறி வினாக்களுக்கு விடையளிக்க வேணடும். பயிற்சியில் சேர விரும்புவோா் அதற்கான விண்ணப்பங்களை மதுரை காமராஜா் பல்கலைக்கழக வலைதளமான  முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, வயது, இனம், நிரந்தர முகவரி ஆகியவற்றுக்கான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ரூ.5 அஞ்சல் முத்திரை ஒட்டப்பட்ட சுய முகவரி எழுதப்பட்ட இரண்டு அஞ்சல் உறைகளுடன் அனுப்ப வேண்டும். அஞ்சல் உறைகளின் மேல்  2021-க்கான பயிற்சி வகுப்பில் சோ்வதற்கான விண்ணப்பம் என்று எழுதப்பட்டு, பயிற்சி இயக்குநா், அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணிகள் பயிற்சி அகாதெமி, இளைஞா் நல படிப்பியல் துறை, மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், மதுரை 625021 என்ற முகவரிக்கு ஜனவரி 21-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

பயிற்சி மையத்தில் ஏற்கெனவே முதல்நிலைத்தோ்வுக்கு முழு நேர பயிற்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்க வேண்டாம். மேலும் விவரங்களுக்கு 0452-2458231, 98656-55180 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com