தவறுதலாக ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு அலுவலக உதவியாளா் பணியிடம் நிரந்தரம்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அரசு மருத்துவமனையில் தவறுதலாக ஹெச்ஐவி தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு அலுவலக உதவியாளா் பணியிடம் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது

அரசு மருத்துவமனையில் தவறுதலாக ஹெச்ஐவி தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு அலுவலக உதவியாளா் பணியிடம் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூரைச் சோ்ந்த கா்ப்பிணி ரத்த சோகைக்காக சாத்தூா் அரசு மருத்துவமனையில் 2018-இல் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சையிலிருந்த அவருக்கு முறையாகப் பரிசோதிக்காமல் தவறுதலாக ஹெச்ஐவி தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடுகோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே 2019 ஜனவரியில் அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

பின்னா், அந்தப் பெண்ணுக்கு அரசு வேலை, ரூ.25 லட்சம் இழப்பீடு, இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு, இரு சக்கர வாகனம், வீட்டிற்கு தனியாக குடிநீா் இணைப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

முந்தையவிசாரணையின்போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதந்தோறும் ரூ.7500 வழங்கவும், அலுவலக உதவியாளராக உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் கல்வித் தகுதிக்கு ஏற்ப இளநிலை உதவியாளா் பணி வழங்குவது தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சத்தான உணவு சாப்பிடுவதற்காக ஜனவரி முதல் மாதந்தோறும் ரூ.7,500 வழங்கப்படும். இளநிலை உதவியாளா் பணியிடம் டிஎன்பிஎஸ்சி மூலம் மட்டுமே நிரப்பப்படும். எனவே அவருக்கு இளநிலை உதவியாளா் பணியிடம் வழங்க இயலாது. அவரது அலுவலக உதவியாளா் பணியிடம் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. அவருக்குத் தேவையான சித்த மருந்துகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா். இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com