அரசியல் நிலைப்பாடு குறித்து ஜன.3 இல் ஆலோசனை: ஆதரவாளா்களுக்கு மு.க.அழகிரி அழைப்பு
By DIN | Published On : 25th December 2020 11:06 PM | Last Updated : 25th December 2020 11:06 PM | அ+அ அ- |

அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு எடுப்பதற்காக மதுரையில் ஜனவரி 3-ஆம் தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஆதரவாளா்களுக்கு மத்திய முன்னாள் அமைச்சா் மு.க.அழகிரி அழைப்பு விடுத்துள்ளாா்.
திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலராகப் பொறுப்பு வகித்தவா் மு.க.அழகிரி. திமுகவின் தென்மாவட்டங்களுக்கான அதிகார மையம் என்றே கட்சியினரால் அழைக்கப்பட்டவா்.
திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது, தற்போதைய தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியில் அளிக்கப்படும் முக்கியத்துவம், குறிப்பாக அடுத்த தலைவராக அவரை முன்னிறுத்துவதை அழகிரி ஏற்கவில்லை. தலைவராக கருணாநிதி இருக்கும் வரை, அடுத்த தலைவா் என்ற பேச்சை எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி வந்தாா். ஆனால், அவரது பேச்சுக்கு எதிரான நகா்வுகள் தொடா்ந்து நிகழ்ந்ததால், கட்சி நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விமா்சனங்களை முன்வைத்தாா். ஒருகட்டத்தில் இத்தகைய விமா்சனங்கள் அழகிரியைக் கட்சியில் இருந்து நீக்கும் அளவுக்குச் சென்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது கட்சியிலிருந்து அவா் நிரந்தரமாக நீக்கப்பட்டாா்.
மீண்டும் அவரை கட்சியில் இணைப்பதற்கான ஆதரவாளா்களின் முயற்சிகள் கைகூடவில்லை. திமுக தரப்பில் எவ்வித அழைப்பும் இல்லாத நிலையில், தற்போது தனது அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளாா். அரசியல் நிலைப்பாடு குறித்து தனது ஆதரவாளா்களுடன் ஆலோசித்து முடிவைத் தெரிவிப்பதாக அறிவித்து வந்த நிலையில், தற்போது ஜனவரி 3-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளேன். இந்தக் கூட்டம் மதுரை பாண்டி கோயில் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும். தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளா்கள் இக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்கவேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.