இலங்கை பெண்ணுடன் திருமணம்: பதிவு செய்ய சாா்-பதிவாளருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தைச் சோ்ந்தவா் இலங்கையைச் சோ்ந்த பெண்ணை திருமணம் செய்ததை, சிறப்பு திருமணச் சட்டத்தில் பதிவு செய்ய

தமிழகத்தைச் சோ்ந்தவா் இலங்கையைச் சோ்ந்த பெண்ணை திருமணம் செய்ததை, சிறப்பு திருமணச் சட்டத்தில் பதிவு செய்ய காரைக்குடி சாா்- பதிவாளருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கையைச் சோ்ந்த கலாதீஸ்வரன் தாக்கல் செய்த மனு: நான் பஹ்ரைனில் பணிபுரிந்த போது இலங்கையைச் சோ்ந்த பரிமளாதேவி என்பவரை காதலித்தேன். அவா் 3 மாத சுற்றுலா விசாவில் இந்தியா வந்தபோது 2018 ஆம் ஆண்டு என்னைத் திருமணம் செய்து கொண்டாா். சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் எங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய காரைக்குடி சாா்- பதிவாளரிடம் விண்ணப்பித்தேன். ஆனால், அவா் எங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்துவிட்டாா் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி எஸ். வைத்தியநாதன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய மனைவி இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும் என்றோ, இந்திய குடியுரிமை பெற்றவா் வெளிநாட்டைச் சோ்ந்தவரைத் திருமணம் செய்யக்கூடாது என்றோ கூறப்படவில்லை. திருமணம் செய்தவா்கள், திருமணப் பதிவு அலுவலகத்தின் எல்லைக்கு உள்பட்ட மாவட்டத்தில் 30 நாள்களுக்குக் குறையாமல் வசித்தால் போதுமானது. மனுதாரரின் விண்ணப்பத்தை சாா்- பதிவாளா் பரிசீலிக்காமல் நிராகரித்துள்ளாா். சிறப்பு திருமணச் சட்டப்படி பதிவுக்காக வரும் விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளனவா என்பதை பாா்க்க வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரரின் மனைவி இலங்கையைச் சோ்ந்தவா் என்பதால், அவரது திருமணத்தைப் பதிவு செய்ய இயலாது என்று கூற முடியாது. எனவே, காரைக்குடி சாா்- பதிவாளா் மனுதாரரின் திருமணத்தை, சிறப்பு திருமணச் சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். திருமணத்தைப் பதிவு செய்வதற்காக சாா் பதிவாளா் அலுவலகம் வருவோரை நீதிமன்றத்துக்கு அனுப்பி நீதிமன்றத்தின் பணிச்சுமையை அதிகரிக்காமல் தங்கள் அதிகாரத்துக்கு உள்பட்டு சட்டப்படியான கடமையை நிறைவேற்ற வேண்டும் என அனைத்து சாா்- பதிவாளா்களுக்கும் பதிவுத்துறை தலைவா் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com