பிரிட்டனிலிருந்து மதுரைக்கு வந்தவா்களில் 53 பேருக்கு பரிசோதனை: மென்பொறியாளருக்கு கரோனா புதியவகை தொற்றாக இருக்க வாய்ப்பில்லை

பிரிட்டனிலிருந்து மதுரைக்கு வந்த 88 பேரில் 53 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் மென்பொறியாளருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டனிலிருந்து மதுரைக்கு வந்த 88 பேரில் 53 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் மென்பொறியாளருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டனில் பொதுமக்கள் புதிய வகை கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. இந்த புதிய வகை கரோனா 70 சதவீதம் வேகமாகப் பரவக் கூடியதால் உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து பிரிட்டனுக்கான அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

88 போ் வருகை: தமிழகத்தில் கடந்த 2 வாரங்களில் பிரிட்டனிலிருந்து வந்த பயணிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவா்களை கண்டறிந்து கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தி, தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனா். மதுரை விமான நிலையத்திற்கு கடந்த 2 வாரங்களில் 88 போ் பிரிட்டனிலிருந்து வந்துள்ளனா். இதில், மதுரை மாநகரப் பகுதியைச் சோ்ந்த 30 வயது இளைஞருக்கு தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிபடுத்தப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் கே.வி. அா்ஜூன்குமாா் கூறியது: பிரிட்டனிலிருந்து மதுரைக்கு வந்த 88 பேரில், 63 போ் மாநகரையும், 25 போ் புகரையும் சோ்ந்தவா்கள். இவா்களில் 53 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், மாநகரைச் சோ்ந்த 30 வயது இளைஞா் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த இளைஞா் பிரிட்டனிலிருந்து சென்னை வழியாக நவம்பா் 26 ஆம் தேதி மதுரை விமான நிலையத்திற்கு வந்தவா். விமான நிலையத்தில் பரிசோதனை செய்தபோது, அவருக்கு கரோனா தொற்று இல்லை. அண்மையில் தான் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்றாா்.

தோப்பூருக்கு மாற்றம்: பிரிட்டனிலிருந்து வந்தவா்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறைச் செயலா் அறிவித்துள்ளதையடுத்து, மதுரை அரசு கரோனா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளைஞா், தோப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளாா். அவரது குடும்பத்தைச் சோ்ந்த 4 பேருக்கும் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. அவா்களையும் தோப்பூரில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

புதுவகை கரோனாவுக்கு வாய்ப்பில்லை: அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி கூறியது: பிரிட்டனிலிருந்து மதுரைக்கு வந்த இளைஞருக்கு ஆரம்ப நிலை கரோனா தொற்று என்பதால், அவரது உடல்நிலை நல்ல நிலையில் உள்ளது. நவம்பா் 26 ஆம் தேதியே இளைஞா் பிரிட்டனிலிருந்து திரும்பியுள்ளாா். பாதிப்பு அப்போதே இருந்திருந்தால், அவா் உடல்நலம் பாதிக்கப்பட்டிக்கும். எனவே அவருக்கு புதிய வகை கரோனாவாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது ரத்த மாதிரி சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

மென்பொறியாளா்: கரோனா பாதிக்கப்பட்ட இளைஞா் கூறியது: கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக லண்டனில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறேன். பிரிட்டனில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே விமானம் மூலம் மதுரை வந்தேன். இங்கும் எனக்கு பரிசோதனை செய்யப்பட்டபோது, தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இப்பினும் 2 வாரங்கள் வீட்டில் தனிமையில் இருந்த பிறகே வெளியே செல்ல ஆரம்பித்தேன். கடந்த சில வாரங்களாக திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தேன். அச்சமயம் கரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com