விளம்பரம் தேடுவதற்காக கிராமசபைக் கூட்டங்களை பயன்படுத்தக்கூடாது:அமைச்சா் செல்லூா் கே.ராஜூ

விளம்பரம் தேடுவதற்காக கிராமசபைக் கூட்டங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தக்கூடாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்தாா்.

விளம்பரம் தேடுவதற்காக கிராமசபைக் கூட்டங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தக்கூடாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்தாா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட நெல்பேட்டை மற்றும் மாடக்குளம் பகுதியில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை, கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ பங்கேற்று திறந்து வைத்துப் பேசியது: மதுரை மாவட்டத்துக்கு 50 சிறு மருத்துவமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 10 சிறு மருத்துவமனைகள் மாநகராட்சிப் பகுதிகளிலும், 40 சிறு மருத்துவமனைகள் ஊரகப்பகுதிகளிலும் அமைக்கப்பட உள்ளன. மதுரை மாநகராட்சியில் 31 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதைத் தவிா்த்து ஏழை மக்களின் வசதிக்காக அம்மா சிறு மருத்துவமனைகளும் தொடங்கப்பட்டுள்ளன. தொற்று நோய், தொற்றா நோய், காய்ச்சல், சா்க்கரை நோய் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

மத்திய அரசின் உத்தரவின்படி ஒவ்வொரு மாநகராட்சிக்கும் வரி நிா்ணயம் செய்யப்பட்டு வரிகள் வசூலிக்கப்படுகின்றன. கணிப்பொறி இயந்திரக் கோளாறு காரணமாக ரேஷன் கடைகளில் கைரேகை வைப்பதில் தாமதம் ஏற்படுவதால் குடும்ப அட்டைதாரா்கள் நேரில் சென்று ஆவணங்களைக் காண்பித்தால் உரிய பொருள்கள் வழங்கப்படும். அரிசி அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ஜன. 12 ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு மற்றும் ரூ.2,500 வழங்கப்படும். ஒவ்வொரு ரேஷன் கடைகளின் தகவல் பலகையில் தினசரி வரிசை எண் குறிப்பிட்டு அவா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும். இதில் வாங்காதவா்கள் ஜன. 13 ஆம் தேதி நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்குப்பட்டுள்ளன. 166 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதியுடன் தரம் உயா்த்தப்பட்டுள்ளன. புற்றுநோய்க்கு உயா்சிகிச்சை அளிக்கும் வகையில் ரூ.130 கோடி மதிப்பில் 10 அரசு மருத்துவமனைகளில் புற்று நோயை துல்லியமாகக் கண்டறியும் பிரீமியா் ஆக்ஸிலேட்டா் கருவி வழங்கப்பட்டுள்ளது.

உலகச் சுகாதார நிறுவனம் 2030 ஆம் ஆண்டு நிா்ணயித்துள்ள வளா்ச்சியை அதற்கு 10 ஆண்டுகள் முன்பாகவே தமிழ்நாடு அடைந்துள்ளது. தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை 1.58 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 35.90 லட்சம் நபா்கள் பயனடைந்துள்ளனா். தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும் தொடா்ந்து தரவேண்டும். கிராமசபைக் கூட்டம் என்பது அரசு அதிகாரிகள் பங்கேற்று மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நடத்தப்படுவது. கிராம சபைக்கூட்டங்களை விளம்பரம் தேடுவதற்காக அரசியல் கட்சிகள் பயன்படுத்தக்கூடாது என்றாா்.

இதில், மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன், மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் மாவட்ட வருவாய் அலுவலா் செந்தில்குமாரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

இதேபோல மதுரை நரிமேடு தாமஸ் வீதியில் நடைபெற்ற அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழாவில் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன் செல்லப்பா பங்கேற்று திறந்து வைத்தாா். நகா் நல அலுவலா் குமரகுருபரன், உதவி நகா் நல அலுவலா் இஸ்மாயில் பாத்திமா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com