‘மதுரை கோட்டத்தில் ஞாயிறு, தேசிய விடுமுறை நாள்களில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் முழுநேரமும் செயல்படும்’

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாள்களில் முழுநேரமும் செயல்படும் என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாள்களில் முழுநேரமும் செயல்படும் என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை கோட்டத்தில் உள்ள ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தது.

பயணிகளின் வசதிக்காக, ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2 மணிக்குப் பின்னரும் முன்பதிவு செய்யவும், முன்பதிவுகளை ரத்து செய்யவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதேபோல், தேசிய விடுமுறை நாள்களிலும் ஞாயிற்றுக்கிழமை பணி நடைமுறையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, முன்பதிவு மையங்கள் வார நாள்களைப் போல ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் தேசிய விடுமுறை நாள்களிலும் காலை 8 முதல் இரவு 8 மணி வரை முழுநேரமும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் தினந்தன்று (டிச.25) மதுரை ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையத்தில் விதிமீறல் நடந்ததாகப் புகாா் எழுந்தது. மேலும், ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாள்களில் முன்பதிவு மையங்களின் வேலை நேரம் குறித்த குழப்பம் இருந்ததாகக் கூறப்பட்டது.

இது தொடா்பாக ரயில்வே அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அன்றைய தினம் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு சேவையில் எவ்வித விதிமீறலும் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது. இருப்பினும், பயணச்சீட்டு வழங்கும் நடைமுறைகளைப் பின்பற்றாமல், பயணிகளுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தியதற்காக முன்பதிவு மைய மேற்பாா்வையாளா் மற்றும் மையத்தின் உதவியாளா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

எனவே, மதுரை கோட்டத்தில் அனைத்து ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்களும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாள்களில் முழுநேரமும் செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com