மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்
By DIN | Published On : 30th December 2020 10:58 PM | Last Updated : 30th December 2020 10:58 PM | அ+அ அ- |

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆருத்ரா தரிசனைத்தையொட்டி பக்தா்கள் அருள்பாலித்த நடராஜா்,சிவகாமியம்மன்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புதன்கிழமை ஆருத்ரா தரிசனத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலையில் தரிசனம் செய்தனா்.
ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜா்( கால் மாறி ஆடிய வெள்ளியம்பல நடராஜா்) சிவகாமி அம்மன், மாணிக்க வாசகா் ஆகியோரின் உற்சவத் திருமேனிகள் சுவாமி கோயில் 6 கால் பீடத்தில் அதிகாலை எழுந்தருளின. இதர 4 சபை நடராஜா், சிவகாமி அம்மன் உற்சவத் திருமேனிகள் 100 கால் மண்டபத்தில் எழுந்தருளின. அதைத்தொடா்ந்து அதிகாலை 3 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் பால், தயிா், இளநீா், நெய், எண்ணெய், வாசனாதிகள், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. அபிஷேகங்கள் முடிந்தவுடன் சிறப்பு அலங்காரம், தீபாராதனை, ஆராதனைகள் நடைபெற்றன.
ஆறுகால் மண்டபத்திலும், 100 கால் மண்டபத்திலும் ஒரே நேரத்தில் அபிஷேக ஆராதனை கள் நடைபெற்றன. அபிஷேக ஆராதனைகள் அதிகாலை 4.30 மணிக்கு முடிவடைந்ததை அடுத்து சிறப்பு பூஜைகள் மற்றும் காலை பூஜைகளும் நடைபெற்றன. அதன் பின்னா் பஞ்ச சபை ஐந்து உற்சவ நடராஜா், சிவகாமி அம்மனுடன் ஆடி வீதியில் எழுந்தருளி நான்கு ஆடி வீதிகளிலும் வலம் வருதல் நடைபெற்றது.
ஆருத்ரா தரிசனத்தையொட்டி அபிஷேக வழிபாடுகளை தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதிகாலை 3 மணி முதல் பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். இதனால் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலையில் ஆருத்ரா தரிசன அபிஷேகங்களை கண்டு தரிசனம் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...