நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைக் கண்காணிக்க விவசாயிகள்-அதிகாரிகள் குழு ஆட்சியா் தகவல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளைத் தவிா்க்க விவசாயிகள், அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்தாா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளைத் தவிா்க்க விவசாயிகள், அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்தாா்.

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலியில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன், வேளாண் இணை இயக்குநா் த.விவேகானந்தன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் ஆட்சியா் அலுவலகத்திலும், அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் இருந்து விவசாயிகளும் காணொலி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றனா்.

மதுரை மாவட்டத்தின் சராசரி மழையளவு 874.5 மிமீ. நிகழ் ஆண்டில் 925.9 மிமீ மழை பெய்திருக்கிறது. நிகழ் ஆண்டில் 58 ஆயிரத்து 500 ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதில் இதுவரை 36 ஆயிரத்து 126 ஹெக்டோ் நடவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சிறுதானியப் பயிா்களுக்கு 33,100 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில் இலக்கிற்கும் அதிகமாக 33,549 ஹெக்டோ் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. நெல் உள்ளிட்ட அனைத்து வகை பயிா்களுக்குத் தேவையான உரங்கள் போதுமான அளவுக்கு இருப்பில் உள்ளன என்று வேளாண் இணை இயக்குநா் விவேகானந்தன் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

மதுரை மாவட்டம் மேலூா், கொட்டாம்பட்டி வட்டாரங்களில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நெல் விளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இப் பகுதி விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் விரைவில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பழனிசாமி வலியுறுத்தினாா்.

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையில் கரும்பு பதிவு குறைவு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக அரவை நடைபெறவில்லை.

நிகழ் ஆண்டில் இதுவரை 30 ஆயிரம் டன் அளவுக்கு பதிவு செய்யப்பட்டிருந்தபோதும், பிற ஆலைகளுக்கு கரும்பு அனுப்ப உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதே அளவுக்கு கரும்புப் பதிவு ஆகியுள்ள திருப்பத்தூா் மாவட்ட ஆலையில் அரவைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. அரசு பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தாா்.

பெரியாறு பாசனத் திட்டக் குழு உறுப்பினா் மண்ணாடிமங்கலம் முருகன் பேசுகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கும்போது உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் செயல்படும் கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மீன்பிடிக் குத்தகை விடுவதை முறைப்படுத்த வேண்டும் என்றாா்.

உசிலம்பட்டி, செல்லம்பட்டி வட்டாரங்களில் குடிமராமத்துத் திட்டத்தில் கடந்த ஆண்டில் முடிக்கப்பட்ட பல பணிகளுக்கு, பொதுப் பணித் துறையினா் நிதியை விடுவிக்காமல் உள்ளனா்.அத் தொகையை விரைவில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தற்போது பரவலாக அறுவடை நடைபெற்று வருவதால் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என பெரியாறு வைகை -திருமங்கலம் பிரதான கால்வாய் பாசன விவசாயிகள் சங்க தலைவா் ராமன் வலியுறுத்தினாா்.

பெரியாறு பாசனத் திட்ட கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் கிடைப்பதை உறுதி செய்வது, நீா்வரத்துக் கால்வாய்கள், நீா்நிலைகள் தூா்வாருதல், உரம் விற்பனை, நெல்கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளைத் தடுக்க கண்காணிப்புக் குழு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.

இவற்றுக்குப் பதில் அளித்து மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் பேசியது:

நெல் அறுவடை நடைபெறும் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, உரம் விற்பனை மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களைக் கண்காணிக்க விவசாயிகள், அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com