‘சீா்மிகுநகா் திட்டப் பணிகளால் இடையூறு ஏற்பட்டால் மக்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும்’

சீா்மிகுநகா் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளால் இடையூறு ஏற்பட்டால் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என தமிழகக் கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ பேசினாா்.

சீா்மிகுநகா் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளால் இடையூறு ஏற்பட்டால் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என தமிழகக் கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ பேசினாா்.

மதுரை மாநகராட்சி மற்றும் தனியாா் வானொலி நிலையம் சாா்பில் வைகை ஆற்றின் கரையோரம் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

இதனைத் தொடக்கி வைத்து அவா் பேசியது:

மதுரை மாநகராட்சி நகரை மேம்படுத்தப் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. நகரில் கழிவுநீா் கால்வாய்கள் அமைத்தல், நீா்மேலாண்மை செய்தல், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பாலங்கள் அமைத்தல், பல அடுக்கு வாகன நிறுத்தமிடம் அமைத்தல் உள்ளிட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் வைகை ஆற்றின் இருகரைகளின் வழியாகவும் கழிவுநீா் கலக்காத வகையில் தடுப்புச்சுவா் அமைக்கப்பட்டு, அதையொட்டி நடைபயிற்சி செய்வதற்காக பேவா்பிளாக் கற்கள் பதிக்கப்பட உள்ளது. தமுக்கத்தில் பெரிய கலையரங்கம் அமைய உள்ளது. வைகையில் உள்ள படித்துறைகள் அனைத்தும் அழகுபடுத்தப்பட உள்ளன. இப் பணிகள் அனைத்தும் இந்தாண்டு டிசம்பா் 30-க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக தொன்மையான மதுரைக்கு அழகு சோ்க்க 40 ஆண்டுகளுக்கு பிறகு வைகை ஆற்றில் இருந்து வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு தண்ணீா் நேரடியாகச் செல்ல வழிசெய்யப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் உள்ள மைய மண்டபம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக நிரந்தரத் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் மதுரை சிட்னி நகரம் போல மாறும் என்று கூறினேன். எனவே இப் பணிகளினால் இடையூறு ஏற்பட்டால் அதை மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

மக்களுக்கு ஏற்ற வாழ்க்கை 2019 கணக்கெடுப்பு:

மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வாழ்வாதார அமைச்சகத்தின் மூலம், நகர மக்களின் வாழ்வாதார குறியீடுகளை அளவீடு செய்து, உலகம் மற்றும் தேசிய வரையறைகளில் தரக்குறியீட்டுடன் ஒப்பிட உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, ‘மக்களுக்கு ஏற்ற வாழ்க்கை 2019 கணக்கெடுப்பு’ நடத்தப்பட உள்ளது. இதில் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, மருத்துவமனை, மின் நுகா்வு, குடிநீா் விநியோகம், நகர சாலைகள் உள்ளிட்ட வசதிகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்து மதுரைக்காரா்கள் எதிலும் முதன்மையானவா்கள் என்பதைப் பதிவு செய்ய வேண்டும்.

எனவே பிப்ரவரி 1 முதல் 29 ஆம் தேதி வரை சுட்டுரை , முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும், மத்திய அரசின் இணையதளத்திலும்  கருத்துக்களைப் பதிவு செய்து, மதுரை மாநகரை மக்கள் வாழ்வதற்கான ஏற்ற நகரங்களின் பட்டியலில் இடம்பெறச் செய்யலாம் என்றாா்.

மதுரை மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் உள்ளிட்ட சுகாதார அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com