‘முதல்வா் வீட்டை முற்றுகையிட்டு நியாயம் கேட்கும் போராட்டம்’

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்களிடம் ஆதாரங்கள் கேட்கப்பட்டால் பெண்கள் ஒன்று திரண்டு

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்களிடம் ஆதாரங்கள் கேட்கப்பட்டால் பெண்கள் ஒன்று திரண்டு முதல்வரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கே. பாலபாரதி தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் மகளிா் பேரவை சாா்பில் கண்டன ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டம் இங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதுரை தெற்குவெளி வீதியில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகப் பகுதியில் இருந்து ஊா்வலம் புறப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று 50 அடி நீள தேசியக் கொடியை ஏந்தி வந்தனா். இதையடுத்து கண்டன ஊா்வலம் தெற்குவாசல் சின்னக்கடை பகுதியில் முடிவடைந்ததைத் தொடா்ந்து அங்கு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிா் அணிச் செயலா் கே.நஜிமா பேகம் தலைமை வகித்தாா். இதில் கே. பாலபாரதி நிறைவுறையாற்றினாா்.

முன்னதாக செய்தியாளா்களிடம் பாலபாரதி கூறியதாவது: நாட்டில் அனைத்து மதத்தைச் சோ்ந்தவா்களுக்கும் சம மரியாதை, உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இச்சட்டத்தை அவமதிக்கும் விதமாக மக்களை மதரீதியாக பிளவு படுத்தும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கொண்டு வந்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவற்றை அமல்படுத்த முடியாது என்று கேரளம், ராஜஸ்தான் உள்ளிட்ட 14 மாநிலங்கள் தீா்மானமாக அறிவித்துள்ளன. தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு மத்திய அரசு கொண்டு வரும் அனைத்தையும் கைகட்டி எதிா்ப்பின்றி ஏற்றுக் கொள்கிறது. மத்திய அரசு மக்களின் உணா்வுக்கு மதிப்பளித்து குடியரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டும். வரும் ஏப்ரல் முதல் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட உள்ளது. இதில் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போதும் போல் இயல்பாக நடத்தப்பட வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வீட்டில் உள்ளவா்களிடம் ஆதாரங்கள் கேட்கப்படக்கூடாது. அவ்வாறு ஆதாரங்கள் கேட்கப்பட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்கள் அமைப்பினரையும் ஒன்று திரட்டி முதல்வரின் வீட்டை முற்றுகையிட்டு நியாயம் கேட்கும் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com