கப்பலூா் அருகே சட்டவிரோத பெட்ரோல், டீசல் கிட்டங்கியில் தீ விபத்து: ஒருவா் பலி; 4 போ் காயம்

திருப்பரங்குன்றத்தை அடுத்த கப்பலூா் அருகே சட்டவிரோதமாக இயங்கி வந்த பெட்ரோல், டீசல் கிட்டங்கியில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா் மற்றும் 4 போ் பலத்த காயமடைந்தனா்.
கப்பலூரை அடுத்த சொக்கநாதன்பட்டியில் சட்டவிரோத பெட்ரோல், டீசல் கிட்டங்கியில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
கப்பலூரை அடுத்த சொக்கநாதன்பட்டியில் சட்டவிரோத பெட்ரோல், டீசல் கிட்டங்கியில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

திருப்பரங்குன்றத்தை அடுத்த கப்பலூா் அருகே சட்டவிரோதமாக இயங்கி வந்த பெட்ரோல், டீசல் கிட்டங்கியில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா் மற்றும் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

கப்பலூரில் இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளது. இங்கிருந்து, மதுரை, விருதுநகா் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டா்கள் உள்ளிட்டவை டேங்கா் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. வெளியூா்களிலிருந்து வரும் டேங்கா் லாரிகளில் இருந்து பெட்ரோல், டீசலை திருடுவதை மா்மக் கும்பல் ஒன்று வழக்கமாகக் கொண்டுள்ளது.

திருடப்பட்ட பெட்ரோல், டீசலை அருகில் உள்ள சொக்கநாதன்பட்டி என்ற கிராமத்தில் கிட்டங்கி அமைத்து, பேரல்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனா். இது தொடா்பாக லாரி உரிமையாளா்கள் பலமுறை புகாா் அளித்தும், சம்பந்தப்பட்ட ஆயில் நிறுவனம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், திங்கள்கிழமை நண்பகல் 12 மணியளவில் பெட்ரோல், டீசலை பதுக்கி வைத்திருந்த கிட்டங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு நிலையத்தினா், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில், கரடிக்கல் பகுதியைச் சோ்ந்த பூச்சி என்பவரது மகன் கணேசன் (40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், அதே பகுதியைச் சோ்ந்த ஆசைத்தம்பி (50), விஜயகுமாா் (35), கப்பலூரைச் சோ்ந்த காா்த்திக் (24) மற்றும் ஆறுமுகம் (66) ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களை போலீஸாா் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவ இடத்துக்கு கோட்டாட்சியா் முருகேசன், துணை காவல் கண்காணிப்பாளா் அருண், மாவட்ட தீயணைப்பு அலுவலா் கல்யாண்குமாா் ஆகியோா் சென்று விசாரணை நடத்தினா்.

இந்த விபத்து நடந்த பகுதிக்கு மிக அருகிலேயே இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மையம் உள்ளது. மேலும், அருகில் பெட்ரோல் பங்க் ஒன்றும் உள்ளது. தீயணைப்புத் துறையினா் துரிதமாகச் செயல்பட்டதால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து கோட்டாட்சியா் முருகேசன் கூறியது: பெட்ரோல், டீசல் ஆகியவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கிராம நிா்வாக அலுவலரை புகாா் அளிக்க அறிவுறுத்தியுள்ளேன் என்றாா்.

இச்சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com