மனநலம் குன்றிய பெண்ணின் 24 வாரக் கருவை கலைக்க அனுமதி அளித்து உயா்நீதிமன்றம் உத்தரவு

மனநலம் குன்றிய பெண்ணின் 24 வாரக் கருவைக் கலைக்க அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மனநலம் குன்றிய பெண்ணின் 24 வாரக் கருவைக் கலைக்க அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கையைச் சோ்ந்த 55 வயது பெண் ஒருவா் தாக்கல் செய்த மனு: என்னுடைய கணவரை இழந்த நிலையில் தற்போது ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறேன். நானும் மனநலம் குன்றிய எனது 26 வயது மகளும் தனியாக வசித்து வருகிறோம்.

நான் காலையில் ஆடு மேய்க்கச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். அப்போது எனது மகள் வீட்டில் தனியாக இருப்பாள். இதைப் பயன்படுத்தி எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் முதியவா் எனது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டாா். இதுகுறித்து அளித்த புகாரில் சிவகங்கை அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் அந்த முதியவரை கைது செய்தனா்.

இந்நிலையில், அப்போது எனது மகள் 12 வார கா்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. அவா் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கா்ப்பிணியாக இருப்பதுகூடத் தெரியாமல் உள்ளாா்.

எனவே, சிவகங்கை அரசு மருத்துவமனையில் எனது மகளின் உடல்நிலை, மனநிலை கருக்கலைப்புக்கு உகந்ததா என பரிசோதனை செய்து கருகலைப்புக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான பரிசோதனைகளை செய்து, அதை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிவகங்கை அரசு மருத்துவமனை முதல்வா் தரப்பில், மனுதாரரின் மகள் 24 வாரக் கா்ப்பிணியாக இருப்பதாகவும், தற்போது அவருக்கு கருவைக் கலைப்பதற்கான உடல் தகுதி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதாரா் மகளின் 24 வாரக் கருவைக் கலைக்க அனுமதியளித்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com