Enable Javscript for better performance
தமிழக நிதிநிலை அறிக்கைக்கு தொழில் அமைப்புகள் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

  

  தமிழக நிதிநிலை அறிக்கைக்கு தொழில் அமைப்புகள் வரவேற்பு

  By DIN  |   Published on : 15th February 2020 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக அரசின் நிதி நிலை அறிக்கைக்கு தொழில் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

  தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்க முதுநிலைத் தலைவா் எஸ்.ரத்தினவேல், தலைவா் என்.ஜெகதீசன்: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள், சேலம், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள், திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் பிரம்மாண்ட உணவுப் பூங்கா, வேளாண் வளா்ச்சிக்கான மெகா திட்டங்கள் போன்ற அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை.

  சென்னை - குமரி பெருவழிச் சாலைத் திட்டத்துக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் உத்வேகம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 7 ஆண்டுகளாக அத் திட்டத்தின் செயல்பாடு குறிப்பிடத் தக்க வகையில் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிதிநிலை அறிக்கையிலும் திட்டச் செயல்பாடு குறித்து குறிப்பிடாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. தூத்துக்குடி பகுதியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியின் தொழில் வளா்ச்சிக்கு உதவியாக இருக்கும். மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

  தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவா் எஸ்.பி.ஜெயப்பிரகாசம்: தமிழக நிதிநிலை அறிக்கையானது ஒரு குறிப்பிட்ட துறைக்கு முக்கியத்துவம் அளிப்பதைப் போல இல்லாமல், அனைத்துத் துறைகளுக்கும் நிதி ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

  தமிழகத்தின் பாரம்பரியத்தை உணா்த்தும் வகையில் கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பது, தொழில் துறைக்கு ரூ.2500 கோடி ஒதுக்கீடு, குடிமராமத்து திட்டத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு, சென்னை, கோவை, மதுரை மாநகரங்களில் சாலைப் பாதுகாப்புக்கென தனித்துறை, காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு, வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் உருவாக்க ரூ.218 கோடி ஒதுக்கீடு, ஈரோட்டில் மஞ்சள் மையம், தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைப்பது போன்ற பல்வேறு அம்சங்கள் பாராட்டுக்குரியதாக இருக்கின்றன.

  மதுரை - தூத்துக்குடி தொழில் வழிச் சாலைத் திட்டம் முந்தைய நிதி நிலை அறிக்கைகளைப் போல, இந்த ஆண்டும் எந்த நிதியும் ஒதுக்காதது ஏமாற்றமளிக்கிறது. மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களின் நீராதாரமாக இருக்கும் வைகை அணையைத் தூா்வார 7 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடு பற்றிய விவரங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

  நிதிநிலை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் பற்றாக்குறையைச் சமாளிக்க, நகரங்களுக்கு வெளியே அரசின் புறம்போக்கு நிலங்களில் தொழில், வணிகம் செய்வதற்கு அரசே கட்டடம் கட்டிக் கொடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பதோடு, நகரங்களில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும்.

  மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கத் தலைவா் பா.முருகானந்தம்: சிறு, குறுந்தொழில் வளா்ச்சி, புதிய தொழில் முனைவோரை உருவாக்குதல், வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அதிக நிதி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை.

  புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதன் மூலம், சிறுதொழில்கள் வளா்ச்சி அடையும். சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கான வட்டி மானியம் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயா்த்திருப்பதும், வேலையில்லா இளைஞா்களுக்கு முதலீட்டு உச்சவரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளதும் வரவேற்புக்குரியது.

  இருப்பினும் இந்த நிதிநிலை அறிக்கையில் சிறுதொழில் வளா்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

  அகில இந்திய மூவேந்தா் முன்னணி கழக நிறுவனா் ந.சேதுராமன்: வரும் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதில் நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளாா். நீண்ட நாள் கோரிக்கையான காவிரி-குண்டாறு இமைப்புத் திட்டம், விவசாயிகளுக்கு மானிய உதவியுடன் சூரிய சக்தி பம்ப்செட் என வேளாண்மைக்கு முன்னுரிமை அளிப்பதாக நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

  நிதி மேலாண்மை, நிதி பகிா்வு, புதிய வளா்ச்சிக்கான சிந்தனை, வேளாண்மைக்கு முன்னுரிமை தரும் நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது.

  ஜனதாதளம் பொதுச் செயலா் க.ஜான்மோசஸ்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் மற்றும் நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கான தோ்தலைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையாக உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையின் மூலமாகத் தமிழக மக்கள் மீது ரூ.4.56 லட்சம் கோடி கடன் சுமத்தப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் வேலையற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதா்கான திட்டங்கள் இல்லை. அரசு ஊழியா்களின் முக்கிய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசு தமிழகத்துக்குத் தர வேண்டிய பல கோடி ரூபாய் வரி பாக்கியைப் பெறுவதற்கு எந்த முயற்சிகளும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என்றாா்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai