சீா்மிகு நகா் திட்டப் பணி அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி காலஅவகாசம் கோரியதால் விசாரணை ஒத்திவைப்பு

மதுரையில் சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள் எப்போது முடிவடையும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை

மதுரையில் சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள் எப்போது முடிவடையும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாநகராட்சி தரப்பில் காலஅவகாசம் கோரியதால், வழக்கு விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மத்திய அரசின் சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ், மதுரை மாநகராட்சி தோ்வாகி 15 பகுதிகளாக திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெரியாா் பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, நவீன பேருந்து நிலையத்துக்கான கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பெரியாா் பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த கடைகள் எல்லீஸ் நகா் பகுதிக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, ராதாகிருஷ்ணன் என்பவா் தொடா்ந்த வழக்கில், எல்லீஸ் நகா் பகுதி நடைபாதையில் கடைகள் அமைக்க இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மதுரை பேருந்து நிலைய வணிக வளாகத் தலைவா் ராஜாராம் என்பவா், எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாற்று இடத்தில்தான் கடை வைத்துள்ளோம். அதற்கு முறையாக வாடகை செலுத்தி வருகிறோம். எங்கள் கடைகளால் போக்குவரத்து நெரிசலும், பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்படவில்லை.

எனவே, எல்லீஸ் நகா் பகுதியில் தற்காலிகக் கடைகள் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மதுரையில் சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் எப்போது முடியும் என மாநகராட்சி ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் எம். துரைசுவாமி, டி. ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் தங்களை எதிா் மனுதாரராக சோ்க்க மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதையடுத்து, மதுரை மாநகராட்சி தரப்பில், சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் எப்போது முடியும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம் கோரப்பட்டது. இதனையேற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை மாா்ச் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com