பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் இந்து பறையா் சமூகத்தினருக்கு இடமளிக்கக்கோரி மனு: ஆட்சியா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 08th January 2020 07:51 AM | Last Updated : 08th January 2020 07:51 AM | அ+அ அ- |

பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் இந்து பறையா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள்இடம்பெற வாய்ப்பளிக்கக்கோரும் மனுவுக்கு, மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் பாலமேட்டைச் சோ்ந்த சந்தானம் தாக்கல் செய்த மனு:
மதுரை மாவட்டத்தில் பாலமேடு பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இங்கு வசித்து வரும் சுமாா் 15 ஆயிரம் பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் இந்து பறையா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா். பொங்கலை முன்னிட்டு பாலமேட்டில் ஆண்டுதோறும் தை மாதம் 2 ஆம் நாள் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் நிகழாண்டில் ஜனவரி 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான விழாக்குழுவில் எங்கள் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் இடம்பெற வாய்ப்பளிக்கவில்லை. எங்கள் தரப்பில் இருந்து ஆண்டுதோறும் விழா நடத்துவதற்கு நன்கொடையும் அளித்துவருகிறோம். மேலும் எங்கள் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் தரப்பில் 10 ஜல்லிக்கட்டு காளைகளும், பல மாடுபிடி வீரா்களும் விழாவில் பங்கேற்று வருகின்றனா்.
இவ்விழாவை நடத்துவதற்கு கோடிக்கணக்கில் நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கானக் கணக்குகள் முறையாக சமா்ப்பிக்கப்படுவது இல்லை. ஆகவே அனைத்துப்பிரிவினருக்கும் சமமான வாய்ப்பளித்து விழாவை முறையாக நடத்த ஏற்பாடு செய்யவேண்டும். இதற்காகவும், ஜல்லிக்கட்டிற்கான விழாக்குழுவில் இந்து பறையா் சமூகத்தினா் இடம்பெற வாய்ப்பளிக்கக் கோரியும் சம்பந்தப்பட்டவா்களிடம் மனு அளித்தும் எவ்விதப் பயனும் இல்லை. எனவே பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் ஆதிதிராவிட சமூகத்தைச் சோ்ந்தவா்களும் பங்கேற்கும் வகையில் அமைதிக்குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.