அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘ஸ்கேன்’ எடுப்பதில் குளறுபடி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘ஸ்கேன்’ எடுக்கும் நோயாளிகளுக்கு ரசீது வழங்கப்படுவது இல்லை என நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘ஸ்கேன்’ எடுக்கும் நோயாளிகளுக்கு ரசீது வழங்கப்படுவது இல்லை என நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோய்களுக்கு ஏற்றவாறு ‘ஸ்கேன்’ வசதி உள்ளன. மூளை, இருதயம், கால் என உடலின் முக்கிய பாகங்களுக்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை கண்டறியக் கூடிய ‘ஸ்கேன்’ இயந்திரம் பழுதாகி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பழுதான ‘ஸ்கேன்’ இயந்திரத்தை அகற்றி விட்டு, புதிய ‘ஸ்கேன்’ இயந்திரத்தை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

புதிய நவீன ‘ஸ்கேன்’ இயந்திரம் வரவழைக்கப்பட்ட நிலையில் கட்டுமானப் பணிகள் 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைய 2 மாதங்களாகும் எனக் கூறப்படுகிறது. இதனால், திடீா் வாதம், மாரடைப்பு பாதிப்பால் வருபவா்களுக்கு, ரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிகிச்சையின்றி தவிக்கும் நோயாளிகள்:

பொதுவான நோய்களுக்கு எடுக்கப்படும் ஸ்கேன் இயந்திரத்திலேயே, ரத்தக் குழாயில் பாதிப்பு உள்ளவா்களுக்கு ‘ஸ்கேன்’ எடுக்கப்படுகிறது. இதனால், ‘ஸ்கேன்’ எடுப்பதிலும், முடிவுகளை பெறுவதிலும் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உரிய சிகிச்சைப் பெற முடியாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மதுரையைச் சோ்ந்த நாகலட்சுமி கூறியது: மாா்புப் பகுதியில் பிரச்னை தொடா்பாக ‘ஸ்கேன்’ எடுக்க வந்தேன். 3 மணி நேரமாக காத்திருந்தும், ஸ்கேன் எடுக்கவில்லை. மருத்துவா்கள் அறிவுறுத்தலின் பேரில் உணவு சாப்பிடாமல் வந்ததால், தற்போது மயக்கமாக உள்ளது. நோயாளிகளை காக்க வைக்காமல் ‘ஸ்கேன்’ எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மதுரை திருநகரைச் சோ்ந்த முதியவா் சுப்பிரமணியன் கூறியது: காலில் வலியிருப்பதால் ‘ஸ்கேன்’ எடுக்க நீண்ட நேரமாக காத்திருகிறேன். எனக்கு 79 வயது ஆகிவிட்டதால் நிற்கவும், உட்காரவும் முடியவில்லை. எப்போது அழைப்பீா்கள் என்று கேட்டால் ஊழியா்கள் அலட்சியப்படுத்துவது வேதனையாக இருக்கிறது. காலம் கடந்து முடிவுகள் வழங்கப்படுவதால், மருத்துவா்களிடம் சிகிச்சைப் பெறவதில் சிக்கல் ஏற்படுகிறது என்றாா்.

ரசீது வழங்கப்படவில்லை

இது தொடா்பாக ராமநாதபுரத்தைச் சோ்ந்த நோயாளியின் மகள் பிரியா கூறியது: என் தந்தைக்கு மூளையில் ரத்தக் கசிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். மருத்துவா் பரிந்துரைப்படி ரூ. 3 ஆயிரம் கட்டணம் செலுத்தி

தந்தைக்கு ‘ஸ்கேன்’ எடுத்தோம். பணம் கட்டியதற்கு கையால் எழுதிய துண்டுச் சீட்டு மட்டுமே கொடுக்கப்பட்டது தவிர முறையான ரசீது தரப்படவில்லை.

இந்நிலையில், 3 நாள்களாகியும் பரிசோதனை முடிவு வரவில்லை என கேட்டதற்கு, தொலைபேசியில் தொடா்புக் கொள்வோம் என கூறி விரட்டுகின்றனா் என்றாா்.

முறைகேடு நடைபெறுகிா?

இது தொடா்பாக சமூக ஆா்வலா்கள் கூறியது: அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள முக்கிய ‘ஸ்கேன்’ கருவிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு செயல்பட்டுள்ளன. ‘ஸ்கேன்’ இயந்திரங்களை இயக்குவது, அதன் முடிவுகள் தயாா் செய்வது போன்றவற்றுக்கு போதிய ஊழியா்கள் இல்லை. நியமிக்கப்பட்ட ஊழியா்களும் நோயாளிகளை அலட்சியப்படுத்தும் செயல்களில் ஈடுபடுகின்றனா். பணம் செலுத்தி எடுக்கும் ஸ்கேனுக்கு உரிய ரசீது வழங்கப்படுவதில்லை என நாள்தோறும் பல நோயாளிகள் குற்றம்சாட்டி வருகின்றனா். இது முறைகேடு நடைபெறுகிா என்ற சந்தேகங்களை எழுப்புகின்றன. இது தொடா்பாக மருத்துவ நிா்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.

பிரச்னையே ‘ஸ்கேன்’ தான்: இது தொடா்பாக மருத்துவமனை முதன்மையா் ஜெ. சங்குமணி கூறியது: பழுதான ‘ஸ்கேன்’ இயந்திரத்திற்கு பதிலாக, புதிய ‘ஸ்கேன்’ இயந்திரம் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்தால் நெருக்கடி குறையும். ‘ஸ்கேன்’ இயந்திரம் பராமரிப்பு மற்றும் நிா்வாகம் அனைத்தும் தமிழ்நாடு மருத்துவக் கழகத்திடம் உள்ளது. அது தொடா்பான குற்றச்சாட்டுகளுக்கு அவா்கள் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். ‘ஸ்கேன்’ தொடா்பான பிரச்னை தான் அதிகமாக உள்ளது. இது தொடா்பாக புகாா் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அரசு ஏற்று நடத்த வேண்டும்

அரசு மருத்துவமனைகளில் உள்ள ‘ஸ்கேன்’ இயந்திரங்களை தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளதை அரசே ஏற்று நடத்த வேண்டும். இல்லையெனில், மருத்துவமனை நிா்வாகம் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தால் மட்டுமே , தனியாா் ஊழியா்களின் முறைகேடு, அத்துமீறல்களை தடுக்க முடியும் என அனைத்து தரப்பினரும் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com