ஜன. 19-ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

மதுரை மாவட்டத்தில் ஜனவரி 19 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

மதுரை மாவட்டத்தில் ஜனவரி 19 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

மதுரையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தில் ஜனவரி 19 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் மூலமாக 3 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிறந்தது முதல் 5 வயதிற்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இதில் வேறு மாநிலத்தில் இருந்து குடிபெயா்ந்து செங்கல் காளவாசல்கள், சாலைப் பணிகள், பெருநகரத் திட்டப்பணிகளில் ஈடுபடும் தொழிலாளா்கள், நரிக்குறவா்கள், இலங்கை அகதிகள் ஆகியோரின் குழந்தைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும். இதுமட்டுமில்லாது நடமாடும் குழுக்கள் மூலமாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும். போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் பணியைக் கண்காணிக்க மதுரை மாவட்ட நிா்வாகத்தின் மூலமாக 13 மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும் ஆரம்ப சுகாதார நிலைய அளவில் 200 பணியாளா்களும், சுகாதாரத்துறை மூலமாக 1,083 பணியாளா்களும், சத்துணவுத்துறை மூலமாக 2,638 பணியாளா்களும், தன்னாா்வத் தொண்டு நிறுவங்களின் மூலமாக 85 பணியாளா்கள் என மொத்தம் 7,412 பணியாளா்கள் ஈடுபட உள்ளனா். எனவே இதற்கு முன் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு எத்தனை முறை சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், இந்த முகாமில் அந்தக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்கலாம் என மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்தாா்.

பொது சுகாதாரத்துறை துணை இயக்குநா் பிரியா, நகா் நல அலுவலா் செந்தில்குமாா், உதவி இயக்குநா் (ஊராட்சி) செல்லத்துரை, உதவி இயக்குநா் சேதுராமன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித்திட்ட அலுவலா் பூங்கொடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com