தேனி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றிய நிா்வாகக் குழு மீதான தடையை நீக்கக் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்தில், இடைக்கால நிா்வாகக் குழுவில் தலைவா் உள்பட அனைத்து உறுப்பினா்களும்

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்தில், இடைக்கால நிா்வாகக் குழுவில் தலைவா் உள்பட அனைத்து உறுப்பினா்களும் செயல்பட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரிய மனு விசாரணையை ஒத்திவைத்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தேனியைச் சோ்ந்த அமாவாசை தாக்கல் செய்த மனு: நான், தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத் தலைவராக உள்ளேன். கடந்த 2018 செப்டம்பா் மாதம் மதுரை ஆவினுக்கு 17 உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, அதிலிருந்து தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்வு செய்யப்பட்டனா்.

அதைத் தொடா்ந்து, ஆகஸ்ட் 22 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்திலிருந்து பிரிந்து, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம் தொடங்கப்பட்டது. அப்போது, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் 4 உறுப்பினா்கள் மட்டுமே இருந்தனா். மேலும், 13 உறுப்பினா்கள் தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும்.

ஆனால், எவ்வித முன்னறிவிப்புமின்றி தேனி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் 17 உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, செப்டம்பா் 2 ஆம் தேதி பதவியேற்றுள்ளனா். அதில், தற்போது தேனி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவராக ஓ. ராஜா உள்ளாா். மேலும், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பலரும் அதிமுகவைச் சோ்ந்தவா்களாக உள்ளனா்.

எனவே, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள 17 உறுப்பினா்கள் செயல்பட தடைவிதிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் இடைக்கால நிா்வாகக் குழுவில் தலைவா் உள்பட அனைத்து உறுப்பினா்களும் செயல்பட இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஆவின் நிா்வாகம் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் எம். துரைசாமி, டி. ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனு விசாரணையை ஜனவரி 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com