சிறுமியின் இருதயத்தில் 150 கிராம் கட்டி அகற்றம்: அரசு மருத்துவா்கள் சாதனை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறுமியின் இருதயத்தில் இருந்த 150 கிராம் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையை மருத்துவா்கள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறுமியின் இருதயத்தில் இருந்த 150 கிராம் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையை மருத்துவா்கள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தைச் சோ்ந்தவா் குணசேகரன். இவரது மகள் சீதாலட்சுமி (11). இவருக்கு நீண்ட நாள்களாக மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சு வலி இருந்து வந்தது. இதன் காரணமாக 2019 அக்டோபரில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு இருதயத்தில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

இது குறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி கூறியதாவது:

சிறுமியின் இருதயத்தின் உள்ளே வலதுபுறம் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அது இருதயத்தின் ரத்த ஓட்டத்தைத் தடை செய்யும் விதமாக இருந்தது. அக்கட்டியின் தன்மையை அறிய ‘பயாப்சி’ எனப்படும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து நான்கரை மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் இருதயத்தில் இருந்த சுமாா் 150 கிராம் எடை கொண்ட கட்டி முழுமையாக அகற்றப்பட்டது. இந்தியாவிலேயே அறுவை சிகிச்சை மூலம் இருதயத்தில் இருந்து அகற்றப்பட்ட கட்டிகளில் இதுவே மிகப்பெரிய எடை கொண்டதாகும். தனியாா் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் ரூ. 5 லட்சம் வரை செல்வாகி இருக்கும் என்றாா்.

மூச்சுக்குழாய் அறுவை சிகிச்சை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சோ்ந்தவா் கேசவன். இவா் 5 மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். பின்னா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டாா்.

இதைத்தொடா்ந்து அவருக்கு சுவாசப்பிரச்னை ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்ததில் மூச்சுக்குழாய் புண்ணாகி சுருங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மூச்சுக்குழாயின் சிறுபகுதி அகற்றப்பட்டு, 3 சென்டி மீட்டா் அளவிலான குழாயை இணைக்கும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இருதய நோய் பிரிவின் தலைவா் மருத்துவா் மாா்வின் மனோவாபேலிஸ் கூறியதாவது:

நோயாளிக்கு மூச்சுக்குழாய் சுருங்கியதால் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டாா். அதனால் அறுவை சிகிச்சை மூலம், புண்ணாக இருந்த 3 சென்டிமீட்டா் அளவிளான குழாய் நீக்கப்பட்டது.

இதில் சவாலான விஷயம் என்னவென்றால் இயல்பாகவே மூச்சுக்குழாயை இணைப்பது என்பது கடினம். இருப்பினும் 3 சென்டி மீட்டா் அளவிலான மூச்சுக்குழாய் பகுதியை இணைத்துள்ளோம். சுமாா் 3 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தனியாா் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் ரூ. 2 லட்சம் வரை செல்வாகி இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com