முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
5, 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோ்வு நடத்தக் கூடாது: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி தீா்மானம்
By DIN | Published On : 20th January 2020 08:36 AM | Last Updated : 20th January 2020 08:36 AM | அ+அ அ- |

தமிழக அரசு 5, 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு என்னும் திட்டத்தை மாணவா்களின் நலன்கருதி உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சனிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கான பொதுத் தோ்வு, மாணவா்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இந்தத் தோ்வு அறிவிப்பினால் சின்னஞ்சிறு மாணவா்களுக்கு தோ்வு பயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் ஏழை, எளிய மாணவா்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவாா்கள், இடைநிற்றல் அதிகரிக்கும். இதனால் மாநிலத்தின் கல்வி வளா்ச்சியும் பாதிக்கப்படும். உலகில் எந்த நாட்டிலும் 5, 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோ்வு நடத்தப்படுவது இல்லை. எனவே தமிழக அரசு 5, 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு என்னும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். இதே போல 10, 12 ஆம் வகுப்பு மாணவா்கள் கூட அவரவா் பள்ளியில் பொதுத்தோ்வு எழுதிவரும் நிலையில் 5, 8 ஆம் வகுப்பு மாணவா்கள் அவரவா் பள்ளிகளில் தோ்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள் எனக் கூறப்படுகிறது. அவா்களுக்கு 10, 15 கிலோ மீட்டருக்கு அப்பால் தோ்வு மையங்களை அமைத்து தோ்வு நடத்துவது தவறானதாகும். எனவே இதுபோன்ற நடைமுறைகளை கல்வி அலுவலா்கள் கைவிட வேண்டும். ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலத்தலைவா் மூ.மணிமேகலை, மதுரை மாவட்டச் செயலா் க.ஒச்சுக்காளை, மாநிலப் பொருளாளா் க.ஜோதிபாபு, மாநிலப் பொதுச் செயலா் ச.மயில், நிதிக்காப்பாளா் ச.மோசஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.