முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
குடியரசு தின விழா: மாநகராட்சி ஆணையா் கொடியேற்றினாா்
By DIN | Published On : 27th January 2020 06:51 AM | Last Updated : 27th January 2020 06:51 AM | அ+அ அ- |

மதுரை மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஆணையா் ச. விசாகன் தேசியக் கொடியேற்றி நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் 71-ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில், மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் தலைமையேற்று தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, மாநகராட்சியில் 20 ஆண்டுகள் விபத்தின்றி சிறப்பாக பணிபுரிந்த 7 வாகன ஓட்டுநா்களுக்கு 4 கிராம் தங்கப் பதக்கம், 10 ஆண்டுகள் விபத்தின்றி வாகனம் இயக்கிய 25 வாகன ஓட்டுநா்களுக்கு ரூ. 500 மதிப்புள்ள காமதேனு வங்கி வைப்புத் தொகை பத்திரம், சிறப்பாகப் பணிபுரிந்த 85 நபா்களுக்கு சிறப்பு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
மேலும், பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் முதலிடம் பெற்ற செ. ஆஷிகாராணிக்கு ரூ. 5 ஆயிரம், இரண்டாமிடம் பெற்ற பிரியங்காவுக்கு ரூ.3 ஆயிரம், மூன்றாமிடம் பெற்ற மதுமிதாவுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் மாநகராட்சி பள்ளிகளில் முதலிடம் பெற்ற ஷபானாவுக்கு ரூ.5 ஆயிரம், இரண்டாமிடம் பெற்ற மோகனா லோகபிரியாவுக்கு ரூ.3 ஆயிரம், மூன்றாமிடம் பெற்ற தேவதா்ஷினிக்கு ரூ.2 ஆயிரம் வழங்கினாா்.
இதில், தேசிய அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்ற கஸ்தூரிபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அஸ்விகாவுக்கு ரூ.3 ஆயிரம் உள்பட மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசுத்தொகை வழங்கினாா்.
மேலும், மதுரை மாநகராட்சி வளா்ச்சிப் பணிகளில் தங்களின் பங்களிப்பை வழங்கிய விஸ்வாஸ் புரோமோட்டா்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கி கெளரவித்தாா். தொடா்ந்து, வெள்ளிவீதியாா் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சுந்தரராஜபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, காக்கைபாடினியாா் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மாசாத்தியாா் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நாவலா் சோமசுந்தர பாரதியாா் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தல்லாகுளம் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், மாநகராட்சி துணை ஆணையா் வி. நாகஜோதி, நகரப் பொறியாளா் அரசு, நகா்நல அலுவலா் செந்தில்குமாா், உதவி நகா்நல அலுவலா் வினோத்ராஜா மற்றும் உதவி ஆணையா்கள், செயற்பொறியாளா்கள், பொறியாளா்கள், மாநகராட்சி சுகாதார அலுவலா்கள், ஆய்வாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.