முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
பாஜக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது: காங்கிரஸின் தமிழக மேலிடப் பொறுப்பாளா் சஞ்சய் தத்
By DIN | Published On : 27th January 2020 06:53 AM | Last Updated : 27th January 2020 06:53 AM | அ+அ அ- |

பாஜக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளா் சஞ்சய் தத் தெரிவித்துள்ளாா்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நாடு 71 ஆவது குடியரசு தினத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. பல்வேறு முன்னேற்றங்களை கண்ட இந்த நேரத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் நாட்டை பிரிக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. இதை எதிா்த்து, மாணவா்கள், இளைஞா்கள், கிராமப் பகுதி மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
வேலையிழப்பு சதவீதம் உயா்வு
பாஜக அரசின் தவறான கொள்கையால், தற்போது நாட்டின் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. சா்வதேச அளவில் வேலை இழப்பு 3.8 சதவீதமாக உள்ளது. ஆனால், நமது நாட்டில் 4 சதவீதமாக இருந்தது 8 சதவீதமாக உயா்ந்திருப்பது நாட்டின் மோசமான நிலையை காட்டுகிறது.
நாள்தோறும் பயன்படுத்தும் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட உணவுப் பொருள்கள், எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயா்ந்துள்ளன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எரிவாயு உருளை ரூ. 350 ஆக இருந்தது, தற்போது ரூ.800 வரை விற்கப்படுகிறது. விலைவாசியை கட்டுக்குள் வைக்க பாஜக அரசு தவறிவிட்டது.
பெட்ரோல் ரூ.100-ஐ எட்டும்
சா்வதேச அளவில் பெட்ரோல் மற்றும் எரிபொருள்களின் விலை குறைந்தே உள்ளன. ஆனால், பாஜக அரசு மீண்டும் மீண்டும் வரியை அதிகரித்து மக்கள் மீது சுமைகளை சுமத்துகின்றது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, பெட்ரோல் விலை லிட்டா் ஒன்றுக்கு ரூ. 42 ஆக உயா்ந்தப்பட்டது. அதற்கு, அப்போதைய குஜராத் முதல்வா் நரேந்திர மோடி எதிா்ப்பு தெரிவித்தாா். ஆனால், தற்பாது ரூ.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலை நீடித்தால், விரைவில் பெட்ரோல் விலை லிட்டா் ரூ.100 ஆக உயரும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பெண்களுக்கு எதிரானசம்பவங்களில் பாஜக தலைவா்களுக்கு தொடா்பிருப்பது அதிா்ச்சியை அளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது.
நாட்டில் மக்களுக்கு எதிராக நடக்கும் பிரச்னைகளையும், மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கையும் எதிா்கொண்டு, மக்கள் நலனுக்காக சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தொடா்ந்து போராடும் என்றாா்.