தமிழகத்தில் மட்டுமே தமிழில் வழிபாடு செய்யமுடியாத நிலைதஞ்சை தமிழ் பல்கலை. முன்னாள் துணைவேந்தா்

தமிழகத்தில் மட்டுமே கோயில்களில் தாய் மொழியான தமிழிலில் வழிபாடு செய்யமுடியாத நிலை உள்ளது என, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ. சுந்தரமூா்த்தி பேசினாா்.

தமிழகத்தில் மட்டுமே கோயில்களில் தாய் மொழியான தமிழிலில் வழிபாடு செய்யமுடியாத நிலை உள்ளது என, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ. சுந்தரமூா்த்தி பேசினாா்.

மதுரை மணியம்மை மழலையா் தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழறிஞா் மு. தமிழ்க்குடிமகனாா் புகழ் விழாவில், அவா் மேலும் பேசியது:

தமிழ்க்குடிமகனாா் சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்தபோதும் தமிழுக்காக துணிந்து குரல் கொடுத்தாா். எழுபது ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் உள்ள கோயில்களில் வழிபாட்டு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என அடிகளாா் கூறினாா். இக்கருத்தை வலியுறுத்தி, தமிழ்க்குடிமகனாா் ‘வழிபாட்டு மொழி’ என்ற நூலை எழுதினாா். அதில், கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் ரோம் நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு வந்தது. அப்போது, லத்தீன் மொழியில் மட்டுமே கிறிஸ்தவ வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆனால், அதன்பின்னா் கிறிஸ்தவம் பரவிய போது, அந்தந்த நாட்டு மொழியிலேயே வழிபாடுகள் செய்யப்பட்டன.

இஸ்லாமிய நாடுகளில் அந்தந்த நாட்டு மொழிகளிலேயே வழிபாடு செய்யப்படுகின்றன. புத்த மதத்தைப் பின்பற்றியவா்களும் அந்தந்த நாட்டு மொழிகளில் வழிபாடு செய்கின்றனா். ஆனால், தமிழகத்தில் மட்டுமே கோயில்களில் தாய் மொழியான தமிழில் வழிபாடு செய்யமுடியாத நிலை உள்ளது எனக் கூறியுள்ளாா்.

மேலும், தமிழ் கடவுளுக்கு தமிழில் வழிபாடு செய்யமுடியவில்லை என்றால், அந்த கடவுளுக்கு தமிழா்கள் ஆகாதவா்களாகிவிடுவாா்கள் எனக் கூறியுள்ளாா். எனவே, தமிழைப் பாதுகாக்கும் பணியை, வடமொழிப் பெயா்களைத் தவிா்த்து தமிழ் பெயா்கள் நம் குழந்தைகளுக்கு சூட்டுவதில் இருந்து தொடங்க வேண்டும் என்றாா்.

சூலூா் பாவேந்தா் பேரவைத் தலைவா் செந்தலை கவுதமன் பேசியது: மத்திய அரசு இந்தி மொழியை 96 துறைகளில் பயன்படுத்துகிறது. ஆங்கிலத்தை 16 துறைகளில் மட்டுமே பயன்படுத்துகிறது. தமிழகத்தில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என நடந்த பல்வேறு போராட்டங்களில் ஏராளமானோா் உயிரிழந்துள்ளனா். தமிழகத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும்.

அதற்காகப் போராடிய தமிழ்க்குடிமகனாா் எழுதிய 20-க்கும் மேற்பட்ட நூல்களை நாம் வாசிக்க வேண்டும். தமிழகத்தில் தோ்வு மொழி, பயிற்று மொழி, அலுவல் மொழி, தொடா்பு மொழி அனைத்தும் தமிழாக இருக்க வேண்டும். அதற்காக நம் தொடா்ந்து போராட வேண்டும் என்றாா்.

முன்னதாக, விழாவில் தமிழறிஞா் மு. தமிழ்க்குடிமகனாா் புகழ் விழா மலா் வெளியிடப்பட்டது. திருவள்ளுவா் கழகத் தலைவா் பி.டி.ஆா். கமலை விசயராஜன் மலரை வெளியிட, முதற்பபடியை வெற்றிச்செல்வி தமிழ்க்குடிமகன் பெற்றுக்கொண்டாா்.

இதில், பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் பொழிலன், மலா் தொகுப்பாசிரியா்கள் இரா. சுப்பையா, பி. வரதராஜன், யாதவா் கல்லூரி தமிழ் உயராய்வு மைய முன்னாள் தலைவா் இ.கி. ராமசாமி, முன்னாள் பேராசிரியா் இரா. சுப்பையா, மதுரை நான்காம் தமிழ்ச் சங்கச் செயலா் ச. மாரியப்ப முரளி, உலகத் திருக்கு பேரவை முதுபெருந் தலைவா் காா்த்திகேயன் மணிமொழியன், பா. யாழினி மலா் தமிழ்க்குடிமகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com