சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த் துறையினரிடமிருந்து விடுவிப்பு: உயா் நீதிமன்றம் உத்தரவு

தந்தை-மகன் கொலை வழக்கில், வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சாத்தான்குளம் காவல் நிலையம், மீண்டும் காவல் துறையினரிடம் ஒப்படைக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: தந்தை-மகன் கொலை வழக்கில், வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சாத்தான்குளம் காவல் நிலையம், மீண்டும் காவல் துறையினரிடம் ஒப்படைக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கை, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், கோவில்பட்டி நீதித்துறை நடுவா் ஜூன் 28 ஆம் தேதி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியபோது, காவல் அதிகாரிகள், காவலா்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, ஆதாரங்களையும் வழங்கவில்லை என உயா் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தாா்.

அதனடிப்படையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தை மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைக்க, உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, தூத்துக்குடி ஆட்சியா் உத்தரவின்பேரில், காவல் நிலையம் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்குரைஞா் செல்லபாண்டியன் வாதிடுகையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் தங்களது விசாரணையை முடித்துவிட்டனா். அதேபோன்று தடயங்கள் சேகரிக்கப்பட்டுவிட்டன. எனவே, வருவாய்த் துறையினா் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையத்தை விடுவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், காவல் நிலையத்தை வருவாய்த் துறையினா் மீண்டும் காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும், வருவாய்த் துறை அதிகாரிகள் தங்கள் வழக்கமான பணிகளுக்குத் திரும்பலாம் என உத்தரவிட்டனா்.

மீண்டும் ஒப்படைப்பு:

நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து வட்டாட்சியா் செந்தூர்ராஜன், துணை வட்டாட்சியா் சுவாமிநாதன் ஆகியோா் காவல் நிலைய பொறுப்பை ஆய்வாளா் பொ்னாட் சேவியரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா். இதையடுத்து, வழக்கமான காவல் நிலைய நடவடிக்கைகள் போலீஸாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com