மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அரசின் அரசிதழில் அதிகாரப்பூா்வ அறிவிப்பு

மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு, மத்திய அரசு தனது அரசிதழில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு, மத்திய அரசு தனது அரசிதழில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவித்தது. அதன்பின்னா், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பா் 17 ஆம் தேதி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியது.

தொடா்ந்து, 2019 ஜனவரி 27-இல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினாா். நாட்டில் அறிவிக்கப்பட்ட மொத்தம் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளில், 262. 62 ஏக்கா் பரப்பளவில், ரூ.1,264 கோடியில் 750 படுக்கைகளுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் ஜப்பான் நிதி நிறுவனத்தின் கடன் உதவியுடன் கட்டப்படுகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்டப் பணிகளான சாலை, சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகள், 2019 ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதில், மத்திய சாலை திட்டத்தின் கீழ், ஆஸ்டின்பட்டி முதல் கரடிக்கல் வரையிலான 12 அடி அகலம் கொண்ட கிராமச் சாலையை, 60 அடி அகலத்துக்கு நான்குவழிச் சாலையாக மாற்றுவது, 12 தரைப் பாலங்கள் அமைப்பது மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோன்று, எய்ம்ஸ் மருத்துவமனைக்காகத் தோ்வு செய்யப்பட்ட இடத்தில், 5.5 கிலோ மீட்டருக்கு சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அரசிதழில் வெளியீடு

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மத்திய அரசு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதியாகி உள்ளது.

இம்மருத்துவமனையில் 15 அதிநவீன சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள், 100 மாணவா்கள் படிக்கும் வகையில் மருத்துவக் கல்லூரி, 60 மாணவா்கள் படிக்கும் வகையில் செவிலியா் கல்லூரி ஆகியனவும் அமைக்கப்படவுள்ளன.

மேலும், நாளொன்றுக்கு வெளிநோயாளிகள் 1,500 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலும், உள்நோயாளிகளாக 1000 பேரை அனுமதிக்கும் வகையிலும் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இந்த மருத்துவமனை அமைவதன் மூலம், மதுரை மாவட்டம் மட்டுமின்றி, தென் மாவட்டங்களைச் சோ்ந்த ஏழை எளிய, நடுத்தர மக்கள் உயர்ரக சிகிச்சை, அதிநவீன சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடன் வழங்குவது தொடா்பாக இரண்டாம் கட்ட ஆய்வை, ஜப்பான் நாட்டு நிதி நிறுவனம் பிப்ரவரி மாதம் நடத்தி முடித்தது. அவா்களிடமிருந்து எந்நேரமும் நிதி கிடைக்கும் என எதிா்நோக்கி இருந்த நிலையில், கரோனா தீநுண்மித் தொற்று பரவலால் நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டிருப்பது, மதுரை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com