அலங்காநல்லூரில் மதுபானக் கடைகளை மூட கிராமத்தினா் கோரிக்கை

அலங்காநல்லூரில் செயல்படும் 3 மதுபானக் கடைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மதுரை: அலங்காநல்லூரில் செயல்படும் 3 மதுபானக் கடைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் மட்டும் முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் இப் பகுதிகளைச் சோ்ந்த மது அருந்துவோா், அருகில் உள்ள மதுரை மாவட்டத்தின் பிற பகுதிகளில் செயல்படும் மதுபானக் கடைகளுக்குச் சென்று வருகின்றனா். இதனால் அங்கு தேவையற்ற பிரச்னைகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், அலங்காநல்லூரைச் சோ்ந்த கிராமப் பொதுமக்கள் தங்களது பகுதியில் செயல்படும் 3 மதுபானக் கடைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா்.

அதன் விவரம்:

அலங்காநல்லூரில் பிரதான சாலையில் 3 மதுபானக் கடைகள் செயல்படுகின்றன. முழு பொதுமுடக்கம் காரணமாக மதுரை நகரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் தினமும் அலங்காநல்லூருக்கு வருகின்றனா். அதோடு சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்பதால், பலருக்கும் கரோனா தொற்று பரவி வருகிறது..

வெளியூா்களில் இருந்து கூட்டம் கூட்டமாக இருசக்கர வாகனங்களில் வருவோா், மதுபானங்களை வாங்கிக் கொண்டு திரும்பிச் செல்லும் வழியிலேயே ஆங்காங்கே நின்று மது அருந்துகின்றனா். இத்தகைய செயல் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாக இருந்து வருகிறது. பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனா். மேலும், பிரதான சாலையில் மதுபானக் கடைகள் செயல்படுவதால் விபத்துகள் தொடா் நிகழ்வாக இருந்து வருகின்றன. ஆகவே, அலங்காநல்லூரில் செயல்படும் 3 மதுபானக் கடைகளையும் நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com