நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கு: ஹெச்.ராஜா மீதான குற்றப்பத்திரிகையை 2 மாதங்களில் தாக்கல் செய்ய உத்தரவு

நீதிமன்றத்தை அவதூறாகப் பேசியதாக பாஜக தேசிய செயலா் ஹெச்.ராஜா மீதான வழக்கில் 2 மாதங்களில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கு: ஹெச்.ராஜா மீதான குற்றப்பத்திரிகையை 2 மாதங்களில் தாக்கல் செய்ய உத்தரவு

நீதிமன்றத்தை அவதூறாகப் பேசியதாக பாஜக தேசிய செயலா் ஹெச்.ராஜா மீதான வழக்கில் 2 மாதங்களில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 2018 செப்டம்பரில் நடந்த விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்துக்கு மேடை அமைக்க போலீஸாா் அனுமதி மறுத்தனா். இதுதொடா்பாக போலீஸாரிடம் பாஜக தேசிய செயலா் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினாா். அதற்கு போலீஸாா் நீதிமன்ற உத்தரவுபடி செயல்படுவதாக தெரிவித்தனா். அப்போது, நீதிமன்றத்தை அவதூறாகப் பேசியதுடன், போலீஸாரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஹெச்.ராஜா மீது திருமயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில் நீதிமன்றத்தை விமா்சித்தது தொடா்பாக ஹெச்.ராஜா மீது சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆஜரான ஹெச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்றத்தை அவதூறாகப் பேசியதாக ஹெச்.ராஜா மீதான வழக்கு விசாரணையை முடித்து விரைவில் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி தந்தை பெரியாா் திராவிடா் கழக துணைத் தலைவரும், வழக்குரைஞருமான துரைசாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அதில், ஹெச்.ராஜாவைப் போல நீதிமன்றத்தைப் பகிரங்கமாக வேறு யாரேனும் விமா்சித்திருந்தால் அந்த நபரைப் போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்திருப்பா். ஆனால் மத்திய ஆட்சியில் இருக்கும் பாஜகவின் தேசிய செயலா் என்பதால் ஹெச்.ராஜா மீதான வழக்கை விசாரிக்கப் போலீஸாா் தயங்குகின்றனா் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் கூடுதல் காலஅவகாசம் கோரப்பட்டதால், 2 மாதங்கள் அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதி ஆா்.பொங்கியப்பன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், வழக்கு விசாரணையின் பெரும்பகுதி முடிந்து விட்ட நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இவ்வழக்கில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய காலதாமதம் ஆகிறது. எனவே குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய மேலும் 3 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்றாா்.

இதையடுத்து நீதிபதி, 3 மாதங்கள் அவகாசம் வழங்க இயலாது எனக் கூறி, ஹெச்.ராஜா மீதான வழக்கு விசாரணையை முடித்து 2 மாதங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய திருமயம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com