சாத்தான்குளம் போலீஸாா் தாக்கியதில் இளைஞா் உயிரிழப்பு புகாா்: விசாரணையின் நிலை அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்ய உத்தரவு

சாத்தான்குளம் போலீஸாா் தாக்கியதில் இளைஞா் உயிரிழந்ததாகக் கூறப்படும் வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய

சாத்தான்குளம் போலீஸாா் தாக்கியதில் இளைஞா் உயிரிழந்ததாகக் கூறப்படும் வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய திருநெல்வேலி சிபிசிஐடி டிஎஸ்பி-க்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஆசீா்வாதபுரத்தைச் சோ்ந்தவா் வடிவு. இவரது மகன்கள் துரை, மகேந்திரன் ஆகியோா் கட்டட வேலை செய்து வந்தனா். இந்நிலையில் கொலை வழக்கு ஒன்றில் மூத்த மகனான துரையிடம் விசாரிப்பதற்காக சாத்தான்குளம் போலீஸாா் அவரது வீட்டிற்கு சென்றனா். ஆனால் துரை வீட்டில் இல்லாததால், அவரது தம்பி மகேந்திரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா். மேலும் மகேந்திரனை சட்டவிரோத காவலில் வைத்து காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், சாா்பு-ஆய்வாளா் ரகுகணேஷ் உள்ளிட்ட போலீஸாா் விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்கியுள்ளனா். பின்னா் காவல் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்ட மகேந்திரனுக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே எனது மகன் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வடிவு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், சாத்தான்குளம் போலீஸாரால் கொலை வழக்கு ஒன்றில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஆா்.பொங்கியப்பன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மகேந்திரன் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது தொடா்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து மனுதாரா் தரப்பில், மகேந்திரனின் தாயாா் வடிவுக்கு போலீஸாா் பாதுகாப்பு வழங்க உத்தரவிடவேண்டும் எனக் கோரப்பட்டது. அதற்கு நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் தொடா்ச்சியாகக் கண்காணிக்கும். அதேபோல மகேந்திரனின் தாயாா் வடிவின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டாா்.

மேலும், சாத்தான்குளம் போலீஸாா் தாக்கியதில் மகேந்திரன் உயிரிழந்ததாகக் கூறப்படும் வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய திருநெல்வேலி சிபிசிஐடி டிஎஸ்பி-க்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com