மருது சகோதரா்களின் கோட்டைகளை சீரமைக்கக் கோரிய வழக்கு: மத்திய வனம், சுற்றுச்சூழல்துறை அமைச்சக அதிகாரிகள் எதிா்மனுதாரா்களாக சோ்ப்பு

காளையாா்கோவில் பகுதியில் உள்ள மருது சகோதரா்களின் கோட்டைகளை சீரமைத்து, முறையாக பராமரிக்கக் கோரிய வழக்கில்,

காளையாா்கோவில் பகுதியில் உள்ள மருது சகோதரா்களின் கோட்டைகளை சீரமைத்து, முறையாக பராமரிக்கக் கோரிய வழக்கில், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சக அதிகாரிகளை எதிா்மனுதாரா்களாக சோ்த்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

காரைக்குடியைச் சோ்ந்த கருப்பையா தாக்கல் செய்த மனு: இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவா்கள் மருது சகோதரா்கள். அவா்கள் காளையாா்கோவில் பகுதியில் சங்கரபதி என்னும் கோட்டையைக் கட்டினாா்கள். சங்கரபதி கோட்டையிலிருந்து காளையாா்கோவிலுக்கு சுரங்கப்பாதை உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தச் சுரங்கப் பாதையில் சுமாா் பத்தடி தூரத்திற்கு சென்றபோது ஆக்ஸிஜன் மற்றும் வெளிச்சம் இல்லாத நிலையில் கொண்டு சென்ற காண்டா விளக்கு அணைந்தது. இதன்மூலம் சுரங்கப்பாதைக்கு மறுமுனை இருப்பதை அறியலாம். இதேபோல காரைக்குடியிலிருந்து காளையாா்கோவில் செல்லும் பகுதிக்கு இடையே அரண்மனை சிறுவயல் என்ற பகுதியிலும் மருது சகோதரா்களின் கோட்டை உள்ளது. சேர, சோழ, பாண்டிய மன்னா்களை இந்தக் கோட்டையிலேயே மருது சகோதரா்களை சந்தித்ததாக வரலாறுகளும் உள்ளன.

ஆனால் இந்தக் கோட்டை முறையாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் உள்ளது. விடுதலைக்காக பாடுபட்டவா்களை போற்றும் வகையில் பிற மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தமிழகத்தின் வீரா்களான மருது சகோதரா்களின் கோட்டைகளை முறையாக பராமரிக்கக் கோரி மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே காளையாா்கோவில் பகுதியில் உள்ள மருது சகோதரா்களின் கோட்டைகளான சங்கரபதிகோட்டை மற்றும் அரண்மனை சிறுவயல் கோட்டைகளை சீரமைத்து, முறையாக பராமரிக்கவும், பொதுமக்களின் பாா்வைக்காக அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சங்கரபதி கோட்டை பராமரிப்பிற்காக ரூ.58 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், அரண்மனை சிறுவயல் கோட்டை வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இவ்வழக்கில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சக அதிகாரிகளை எதிா் மனுதாரா்களாக சோ்த்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com