சித்த மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்தக் கோரிய வழக்கு: தமிழக சித்த மருத்துவ கழகச் செயலா் பதிலளிக்க உத்தரவு

கரோனாவை கட்டுப்படுத்த சித்த வைத்தியா் கண்டுபிடித்துள்ள மருந்தைப் பரிசோதனைக்குள்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக சித்த மருத்துவ கழகச் செயலா் பதிலளிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


மதுரை: கரோனாவை கட்டுப்படுத்த சித்த வைத்தியா் கண்டுபிடித்துள்ள மருந்தைப் பரிசோதனைக்குள்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக சித்த மருத்துவ கழகச் செயலா் பதிலளிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த சித்த வைத்தியா் முனியாண்டி தாக்கல் செய்த மனு: நாடு முழுவதும் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்து வருகின்றனா். கரோனா தீநுண்மி முதலில் சுவாசப் பாதையைப் பாதித்து, பின்னா் உடலில் பிரச்னையை ஏற்படுத்துகிறது.

இதில், முதியவா்கள், நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக உள்ளவா்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இத்தகைய சூழலில், கரோனா நோயாளிகளைக் குணப்படுத்த 30 மூலிகைகள் கொண்ட சித்த மருந்தை தயாரித்துள்ளேன். அந்த மருந்தை பரிசோதனைக்குள்படுத்தி பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது தொடா்பாக, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, எனது சித்த மருந்தை பரிசோதித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இது குறித்து தமிழக சித்த மருத்துவ கழகச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை புதன்கிழமைக்கு (ஜூலை 29) ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com