விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை விதிகளை மீறி இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன்?- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 

தென்காசி அருகே விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை விதிகளை மீறி இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 
Madurai High Court Order
Madurai High Court Order

தென்காசி அருகே விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை விதிகளை மீறி இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள வாகைக்குளத்தைச் சோ்ந்தவா் விவசாயி அணைக்கரை முத்து (72). இவா் தனது தோட்டத்தில் காய்கனி பயிரிட்டிருந்தாா். அவா் பயிா் பாதுகாப்புக்காக தோட்டத்தைச் சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்தாராம். இதுகுறித்த விசாரணைக்காக கடந்த புதன்கிழமை வனத் துறையினா் அழைத்து சென்ற நிலையில் அவா் உயிரிழந்தாராம். வனத்துறையினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினா்கள் அணைக்கரைமுத்துவின் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். 

இதுதொடர்பாக தென்காசியைச் சோ்ந்த பாலம்மாள் என்பவா் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு: தென்காசி மாவட்டம், வாகைக்குளத்தில் உள்ள எங்கள் தோட்டத்தில் மின்வேலி அமைத்திருப்பதாகக் கூறி, எனது கணவா் அணைக்கரை முத்துவை வனத் துறையினா் விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு மயக்கமடைந்த எனது கணவரை, வனத் துறையினா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். ஆனால், அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனா். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட எனது கணவா் வனத் துறையினரால் தாக்கப்பட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளாா். 

எனவே, எனது கணவரின் உடலை மூத்த தடயவியல் மருத்துவா்கள் குழுவினா் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்கிய வனத் துறையினா் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும். மேலும், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா். இந்த மனு நீதிபதி ஆா். பொங்கியப்பன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனு தொடா்பான விவரங்களைச் சேகரிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். 

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தென்காசி அருகே விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை விதிகளை மீறி இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன்? மாலை 4 மணிக்கு மேல் உடற்கூராய்வு செய்யக்கூடாது என விதி உள்ள நிலையில் இரவில் அவசரமாக உடற்கூராய்வு செய்தது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து விவசாயி அணைக்கரை முத்துவின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com