முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்துக்கு வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரிப்பு
By DIN | Published On : 29th July 2020 11:04 PM | Last Updated : 29th July 2020 11:04 PM | அ+அ அ- |

திருப்பத்தூா் அருகேயுள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் பருவகாலத்துக்கு முன்பே வந்துள்ள வெளிநாட்டுப் பறவைகள்.
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்துக்கு பருவகாலத்துக்கு முன்பே அதிகளவிலான வெளிநாட்டுப் பறவைகள் வரத் தொடங்கியுள்ளன.
திருப்பத்தூா் அருகே கொள்ளுகுடிப்பட்டி கண்மாயில் 38.4 ஏக்கரில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் பல ஆயிரக்கணக்கான வெளிநாடு மற்றும் வெளி மாநில பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வருவது வழக்கம். மீண்டும் பிப்ரவரி , மாா்ச் மாதங்களில் அந்தப் பறவைகள் குஞ்சுகளுடன் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றுவிடும்.
நிகழாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் தொடா்ந்து அவ்வப்போது மழை பெய்து வருவதால், சரணாலயம் அமைந்துள்ள கண்மாய் முழுவதும் பசுமை போா்த்தியதுபோல் காணப்படுகிறது. இதனால் பருவ காலத்துக்கு முன்பே உண்ணிகொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், நத்தை கொத்திநாரை போன்ற வெளிநாடு மற்றும் வெளி மாநில பறவைகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து கொள்ளுகுடிபட்டியைச் சோ்ந்த பூபதி கூறியது:
நிகழாண்டு சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் ஜூலை மாத தொடக்கத்திலேயே பறவைகள் வரத் தொடங்கிவிட்டன. இங்கு பாம்புதாரா, நத்தை கொக்கி நாரை, மாா்கழியன், கருநீல அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 10 வகையான பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்துள்ளன. அவற்றை பாதுகாக்க எப்போதும்போல, நிகழாண்டும் தீபாவளிக்கு வெடி வெடித்துக் கொண்டாட மாட்டோம் என்றாா்.