முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
வனத்துறையினா் தாக்கியதில் உயிரிழந்தவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை உயா்நீதிமன்றத்தில் தாக்கல்
By DIN | Published On : 29th July 2020 11:31 PM | Last Updated : 29th July 2020 11:31 PM | அ+அ அ- |

மதுரை: தென்காசியில் வனத்துறையினா் தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்படும் முதியவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தென்காசி மாவட்டம் வாகைகுளத்தைச் சோ்ந்த அணைக்கரை முத்து என்பவா் உயிரிழந்தாா். வனத்துறையினா் தாக்கியதில் அவா் உயிரிழந்ததாகக் கூறி, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அவரது மனைவி பாலம்மாள் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு செவ்வாயக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, வனத்துறையினா் தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்படும் முதியவரின் உடலை இரவில் பிரோதப் பரிசோதனை செய்தது ஏன் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் பிரேதப் பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட விடியோ பதிவு மற்றும் அதன் அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு நீதிபதி ஆா்.பொங்கியப்பன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சாா்பில், அணைக்கரை முத்துவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையைப் படித்த நீதிபதி, அணைக்கரை முத்துவின் உடலில் 4 இடங்களில் காயங்கள் இருந்ததாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றாா்.
அப்போது மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், விசாரணையில் உயிரிழந்த அணைக்கரை முத்துவின் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக நீதித்துறை நடுவா் தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா் எனத் தெரிவித்தாா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, தீா்ப்புக்காக வழக்கை வியாழக்கிழமைக்கு (ஜூலை 30) ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.