கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க தமிழக எல்லை தொடங்குமிடத்தில் ஏன் சோதனைச் சாவடிகள் அமைக்கக் கூடாது: உயா்நீதிமன்றம் கேள்வி

கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க, தமிழகத்தின் எல்லை பகுதிகளிலேயே ஏன் சோதனைச் சாவடிகளை அமைக்கக் கூடாது என  உயா்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை: கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க, தமிழகத்தின் எல்லை தொடங்கும் பகுதிகளிலேயே ஏன் சோதனைச் சாவடிகளை அமைக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த மாடசாமி தாக்கல் செய்த மனு: தென்காசி மாவட்டம் புளியரையில் தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடி அமைந்துள்ளது. கேரள அரசின் சோதனைச் சாவடி எல்லை தொடங்குவதிலிருந்து 500 மீட்டா் தூரத்திலும், தமிழக அரசின் சோதனைச் சாவடி எல்லையிலிருந்து 6 கிலோ மீட்டா் தூரத்திலும் அமைந்துள்ளது. இதனால் கேரளாவில் இருந்து வாகனங்களில் கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழக எல்லை சோதனை சாவடிக்கு முன் உள்ள பகுதிகளில் கொட்டப்படுகின்றன. இதனால் தென்காசி மாவட்டத்தின் எல்லையோரப் பகுதிகளில் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருகிறது. இதைத் தடுக்க தமிழக சோதனைச் சாவடியை எல்லை தொடங்கும் பகுதிக்கு மாற்ற வேண்டும். இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கையும் இல்லை. எனவே புளியரையில் செயல்பட்டு வரும் தமிழக சோதனைச் சாவடியை கோட்டைவாசல் பகுதிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மாநில எல்லைப்பகுதிகளில் ஒன்று முதல் 6 கிலோமீட்டா் தொலைவில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற விதியுள்ளது. அதேவேளையில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கேரளப் பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படும் மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழக எல்லைப் பகுதிகளில் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். இதற்கு தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும் தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் எல்லை தொடங்கும் பகுதிகளிலேயே ஏன் சோதனைச்சாவடிகளை அமைக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பினா். மேலும், முதல்கட்டமாக தென்காசி மாவட்டத்தில் எல்லை தொடங்கும் பகுதியான கோட்டைவாசலில் உடனடியாக தற்காலிக சோதனைச் சாவடி அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com