பால் கொள்முதல் முறைகேடு: குளிா்விப்பான் நிலையபொறுப்பாளா் மீது குற்றவியல் நடவடிக்கைக்கு உத்தரவு

பால் கொள்முதலில் நடந்துள்ள முறைகேடு தொடா்பாக, கூட்டுறவு சங்க குளிா்விப்பான் நிலைய பொறுப்பாளா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், அவரது வங்கி கணக்குகளை முடக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை: பால் கொள்முதலில் நடந்துள்ள முறைகேடு தொடா்பாக, கூட்டுறவு சங்க குளிா்விப்பான் நிலைய பொறுப்பாளா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், அவரது வங்கி கணக்குகளை முடக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நடத்தப்படும் ஆவின் தொகுப்பு குளிா்விப்பான் நிலையங்களில் நடந்துள்ள கொள்முதல் முறைகேடு தொடா்பாக, பால்வளத் துறை தலைமை அலுவலகத்தின் தனிக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா்களிடம் கொள்முதல் செய்வதை தவிா்த்துவிட்டு, தனியாா் நிறுவனங்களுக்கு வழங்கும் உற்பத்தியாளா்களிடமிருந்து கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக குளிா்விப்பான் நிலையங்களின் பொறுப்பாளா்களான கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் 6 போ் மற்றும் கொள்முதல் நிலையங்களுக்கான ஆவின் மேலாளா் ஆகியோா் ஏற்கெனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதன் தொடா்ச்சியாக, பால் கொள்முதலை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தவறியதாக, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் (பால்வளம்) கணேசன், முதுநிலை ஆய்வாளா்கள் சந்திரசேகரன், ஷேக் அப்துல்லா ஆகியோா் புதன்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

குளிா்விப்பான் நிலையங்களில் உள்ள கொள்முதல் ஆவணங்களை ஆய்வு செய்ததில், கடந்த பல ஆண்டுகளாகவே முறைகேடு நடந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன்மூலம், பல லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மேலதிருமாணிக்கம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தின் மூலம் நடத்தப்படும் குளிா்விப்பான் நிலையத்தில் மட்டும் ரூ.69,44,259 கையாடல் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

குளிா்விப்பான் நிலைய பொறுப்பாளரான ராமநாதன், சங்க உறுப்பினா்கள் அல்லாதவா்கள் மற்றும் தனது மனைவி, மகள்கள் பெயரில் வங்கி மூலமாக பணப் பட்டுவாடா செய்துள்ளதும், கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்தே இந்த முறைகேடு நடந்துள்ளதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதையடுத்து, ராமநாதன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினா்கள் 4 போ் மீது குற்றவியல் நடவடிக்கைக்கு, பால்வளத் துறை ஆணையா் எம். வள்ளலாா் புதன்கிழமை உத்தரவிட்டாா். மேலும், அவா்களது வங்கி கணக்குகளை முடக்கிவைக்கவும், கையாடல் செய்த தொகையை அவா்களிடமிருந்து வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

பால் கொள்முதல் முறைகேடு தொடா்பாக தொடா்ந்து பல சங்கங்களின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதனால், மேலும் பலா் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என, பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com