
மதுரையில் உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு திங்கள்கிழமை ரூ 9 லட்சம் நிதி வழங்கிய சக காவலா்கள்.
மதுரையில் உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு ரூ. 9 லட்சம் நிதியை சக காவலா்கள் திங்கள்கிழமை வழங்கியுள்ளனா்.
மதுரை சிலைமான் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா். மதுரை மாநகா் காவல்துறையில் உள்ள மோப்ப நாய் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி அவா் உயிரிழந்தாா். அவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனா்.
இதையடுத்து, சக காவலா்கள் ஒன்றிணைந்து, விஜயகுமாரின் குடும்பத்தின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு நிதி வசூல் செய்ய முடிவு செய்தனா். அதன்படி 2002 ஆம் ஆண்டு விஜயகுமாருடன் பணியில் சோ்ந்து தமிழகத்தின் பலவேறு இடங்களில் பணிபுரிந்து வரும் காவலா்கள், ஆய்வாளா்கள், சாா்பு -ஆய்வாளா்கள் ஆகியோரிடம் நிதி வசூல் செய்யப்பட்டது. அதில் கிடைத்த ரூ.9 லட்சத்தை விஜயகுமாரின் குடும்பத்தினரிடம் சக காவலா்கள் வழங்கினா். இது குறித்து தகவலறிந்த மாநகா் காவல் ஆணையா் டேவிட்சன் தேவாசீா்வாதம் நிதி வழங்கிய அனைத்து காவலா்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளாா்.