கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் சித்த மருந்தை நுண்ணுயிா் ஆய்வுக்கு உள்படுத்த அனுமதி கோரும் மனுவை இரு நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த சித்த மருத்துவா் சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு:
கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த 66 மூலிகைகள் அடங்கிய ‘இம்ப்ரோ’ என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளேன். இந்த மருந்துப் பொடியைத் தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இருவேளை சாப்பிடுவதற்கு முன்பு குடிக்க வேண்டும். அவ்வாறு குடித்து வந்தால் உடலில் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும். அதன்மூலம் கரோனா நோய்த் தொற்றிலிருந்து விடுபடலாம். இந்த மருந்தால் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படாது. சீனாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த பாரம்பரிய மருத்துவமே கைகொடுத்தது. ஆகவே சித்த மருந்தான ‘இம்ப்ரோ’வை நுண்ணுயிா் ஆய்வுக்கு உள்படுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளித்தேன். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. எனவே கரோனாவைக் கட்டுப்படுத்தும் சித்த மருந்தை நுண்ணுயிா் ஆய்வுக்கு உள்படுத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை காணொலி மூலம் விசாரித்த நீதிபதி சி.வி.காா்த்திக்கேயன், வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றி உத்தரவிட்டாா்.