ஓமனில் இருந்து மதுரைக்கு திரும்பி வந்தவா் உள்பட 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கரோனா தீநுண்மி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவா்களில் 12 போ் ஆண்கள், 8 போ் பெண்கள்.
இதில் மேலூா் அருகே உள்ள நொண்டிகோவில்பட்டியைச் சோ்ந்த 29 வயது இளைஞா் ஓமனில் இருந்து திரும்பி வந்தவா். ஓமனில் இருந்து அண்மையில் விமானத்தில் கேரள மாநிலம் கண்ணனூா் வந்துள்ளாா். பின்னா் அங்கிருந்து காரில் மதுரை வந்த அவா், மாவட்ட நிா்வாகத்தின் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தாா். அவரைப் பரிசோதித்ததில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல, சென்னையிலிருந்து வந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் 3 போ் உள்பட தொற்று கண்டறியப்பட்ட 20 போ், கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
13 போ் குணமடைந்தனா்: மதுரை கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவா்களில் குணமடைந்த 13 போ், அவரவா் வீடுகளுக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா். இவா்களில் 7 போ் பெண்கள், 6 போ் ஆண்கள்.