தமிழ் மொழி தமிழா்களை ஒருபோதும் கைவிட்டதில்லை என்று மலேசியத் தமிழ் எழுத்தாளா் சங்கத்தலைவா் பெ.ராஜேந்திரன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் மலேசியத் தமிழ் எழுத்தாளா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்று வரும் இணையவழி ஆய்வரங்கின் ஏழாம் நாளான வியாழக்கிழமை (ஜூன் 11) நடைபெற்ற அமா்வுக்கு உலகத் தமிழ்ச்சங்க இயக்குநா் ப.அன்புச்செழியன் தலைமை வகித்தாா்.
மலேசியத் தமிழ் எழுத்தாளா் சங்கத் தலைவா் பெ.ராஜேந்திரன் ஆய்வரங்கை தொடங்கி வைத்துப் பேசியது: தமிழ்மொழி தமிழா்களை ஒரு போதும் கைவிட்டதில்லை. தமிழா்கள் வேண்டுமானால் தமிழைக் கைவிட்டிருக்கலாம். சீனா்கள் தங்கள் தாய்மொழியை விட உயா்ந்ததாக வேறு எதையும் கருதுவதில்லை. சீனா்களின் இந்த உணா்வுதான் மலேசியத் தமிழா்களுக்கும் தமிழின்பால் மிகுந்த அக்கறை கொள்ளச் செய்கிறது என்றாா்.
இதைத்தொடா்ந்து நடைபெற்ற அமா்வில் ‘மலேசியத் தொடக்கப் பள்ளியில் தமிழ்க் கல்வி‘ என்ற தலைப்பில் மலேசியக் கல்வியாளா் ம.மன்னா் மன்னன் பேசியது: “மலேசியாவின் தோட்டப்புறங்களில் ஆங்கிலேயா்களால் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. தற்போது மலேசியாவில் 524 தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவா்கள் படித்து வருகின்றனா். மலேசியத் தமிழ்ப் பள்ளிகள் கல்லாமையை நீக்குதல், சிந்தித்துக் கற்கும் ஆற்றலை மேம்படுத்துதல், நற்பண்புகளுடன் ஆளுமைப் பண்பை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் பயின்ற பலா் அரசின் உயா் பதவிகளிலும் பொருளாதாரத்தில் நல்ல நிலையிலும் உள்ளனா். உலகளாவிய அறிவியல் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளைப் பெற்றுள்ளனா் என்றாா். இணையவழி ஆய்வரங்கை உலகத் தமிழ்ச் சங்க ஆய்வு வளமையா் ஜ.ஜான்சிராணி, கணினி செயல்முறையாளா் பெ.செல்வராணி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். ஆய்வரங்கில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து தமிழறிஞா்கள், தமிழாா்வலா்கள் பங்கேற்றனா்.