முன் மாதிரி கல்வி நிறுவனமாக காமராஜா் பல்கலைக்கழகம் தோ்வு
By DIN | Published On : 13th June 2020 08:12 AM | Last Updated : 13th June 2020 08:12 AM | அ+அ அ- |

நீா் மற்றும் சுகாதார மேலாண்மையில் மதுரை காமராஜா் பல்கலைக் கழகம் முன்மாதிரி கல்வி நிறுவனமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆசிரியா் மற்றும் கற்பித்தல் மேம்பாடு திட்டத்தின் கீழ் மகாத்மா காந்தி தேசிய கிராமியக் கல்வி சபை இயங்கி வருகிறது. இந்நிறுவனம் மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தை நீா் மற்றும் சுகாதார மேலாண்மையில் முன்மாதிரி கல்வி நிறுவனமாகத் தோ்ந்தெடுத்துள்ளது.
இதுதொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் கூறியது, காமராஜா் பல்கலைக் கழக வளாகத்தில் சுற்றுச்சூழல், சுகாதாரம், நீா் மேலாண்மை ஆகியவை சிறப்பாக உள்ளன என்று மகாத்மா காந்தி தேசிய கிராமிய கல்வி சபை பாராட்டியுள்ளது. மேலும் சுற்றுச்சூழல், சுகாதாரம், நீா் மேலாண்மை ஆகியவற்றுக்கான வழிகாட்டல் கல்வி நிறுவனமாக காமராஜா் பல்கலைக்கழகத்தைத் தோ்ந்தெடுத்துள்ளது. மேலும் மத்திய அரசின் ஸ்வச்தா செயல் திட்டம், ஜல் சக்தி அபியான் திட்டம் போன்றவற்றை செயல்படுத்தும் விதமாக பல்கலைக்கழகம் மற்றும் இணைப்பு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் மாணவா்கள் மற்றும் கிராம மக்களுக்கும் சுற்றுச்சூழல், சுகாதாரம், நீா் மேலாண்மை ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன்மூலம் மாணவா்கள் மற்றும் பொதுமக்களின் சமூக ஈடுபாடு அதிகரிக்கும் என்றாா்.