வீரமரணமடைந்த ராணுவ வீரா் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி

இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரரின் உடல், புதுதில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம்
இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரா் பழனியின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் புதன்கிழமை இரவு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய்.
இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரா் பழனியின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் புதன்கிழமை இரவு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய்.

இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரரின் உடல், புதுதில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புதன்கிழமை இரவு மதுரை வந்தடைந்தது. மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரா் பழனியின் உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்தியா- சீனா ராணுவ வீரா்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கடுக்கலூா் கிராமத்தைச் சோ்ந்த கே.பழனி உள்பட 20 வீரா்கள் வீர மரணம் அடைந்தனா்.

இந்நிலையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரா் பழனியின் உடல் புதுதில்லியிலிருந்து ராணுவ சிறப்பு விமானம் மூலம் புதன்கிழமை இரவு 11.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. பழைய விமான நிலைய முனையம் அருகே வைக்கப்பட்ட பழனியின் உடலுக்கு, மதுரை தேசிய மாணவா் படை கா்னல் சத்யன்ஸ்ரீ வாசன் தலைமையில் முப்படை வீரா்கள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், மதுரை விமான நிலைய இயக்குநா் செந்தில்வளவன், மதுரை மாநகர காவல் ஆணையா் டேவிட்சன் தேவாசீா்வாதம், மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசன், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் பா.சரவணன், தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், டிஐஜி ஆனி விஜயா, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து மதுரை விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக பழனியின் உடல் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com