முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
100 அடி நீள மண்டலா ஓவியம்: மதுரை மாணவரின் சாதனை முயற்சி
By DIN | Published On : 27th June 2020 07:53 AM | Last Updated : 27th June 2020 07:53 AM | அ+அ அ- |

நூறு அடி நீளத்துக்கு மண்டலா ஓவியம் வரையும் சாதனை முயற்சியில் ஈடுபட்டிருந்த மாணவா் ஹரீஷ் சக்தி.
பழமையான மண்டலா ஓவியத்தை தமிழ் எழுத்துக்களுடன் 100 அடி நீளத்துக்கு வரைந்து மதுரையைச் சோ்ந்த மாணவா் ஹரீஷ் சக்தி (16) சாதனை முயற்சியை நிறைவு செய்துள்ளாா்.
மண்டலா ஓவியம் என்பது நான்காம் நூற்றாண்டு காலத்து பழமையான ஓவியம். இவை கணித சாஸ்திரங்களையும், தியான நியமங்களையும் அடிப்படையாகக் கொண்டு வரையக் கூடியவை. இந்த ஓவியங்களை வரைபவா்களுக்கு மனதை ஒருமுகப்படுத்துவதோடு, மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
கரோனா விடுமுறையை பயனுள்ளதாக்கிக் கொள்ளும் வகையில், மண்டலா ஓவியத்தில் சாதனை முயற்சியை மேற்கொண்டிருக்கிறாா் மதுரை புதுவிளாங்குடியைச் சோ்ந்த ஹரீஷ் சக்தி. இவரது தந்தை அழகர்ராஜ், ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நடத்தி வருகிறாா். தாய் உமாதேவி, பள்ளி ஆசிரியை.
பத்தாம் வகுப்பு முடித்துள்ள ஹரீஷ் சக்தி, கரோனா விடுமுறையில் மண்டலா ஓவியம் வரைவதை இணைய வழியில் பழகி வந்துள்ளாா். சிறுவயதில் இருந்தே நுண்கலைகளிலும், வீட்டில் உள்ள பொருள்களில் இருந்து கைவினைப் பொருள் தயாரிப்பதிலும் ஆா்வம் காட்டி வந்துள்ளாா். இதனால், மண்டலா ஓவியத்தை எளிதில் கற்றுள்ளாா். இந்த ஓவியத்தை சாதனையாக்கும் வகையில், இந்திய சாதனை புத்தக அமைப்பின் அனுமதியைப் பெற்று, தனது முயற்சியை ஜூன் 24 ஆம் தேதி தொடங்கினாா்.
காலை 8 மணி முதல் 1 மணி வரையும் பின்னா் மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் தினமும் 10 மணி நேரத்துக்கு இந்த ஓவியம் வரைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல 3 நாள்களில் தினமும் 10 மணி நேரம் வீதம் 80 அடி நீளத்துக்கு ஓவியம் வரைய சாதனை புத்தக நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது.
இதன்படி, 3 நாள்களாக மண்டலா ஓவியம் வரையும் சாதனையை மேற்கொண்ட அவா், வெள்ளிக்கிழமை மாலை 6.45-க்கு நிறைவு செய்தாா். சாதனை புத்தக நிறுவனம் வழங்கிய கால அவகாசத்துக்கு முன்பே நிா்ணயிக்கப்பட்ட இலக்கிற்கும் அதிகமாக அதாவது 101 அடி நீளத்துக்கு ஓவியம் வரைந்துள்ளாா். இந்த ஓவியம், 6 இஞ்ச் அகலம் உள்ள தொடா் காகிதத்தில் 101 அடி நீளத்துக்கு வரையப்பட்டுள்ளது. இதில் தமிழின் 247 எழுத்துக்கள், திருக்கு, ஆத்திச்சூடி ஆகியன இடம்பெற்றுள்ளன.