மாசி வீதிகளில் சீா்மிகு நகா் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
By DIN | Published On : 01st March 2020 02:42 AM | Last Updated : 01st March 2020 02:42 AM | அ+அ அ- |

மதுரை: மதுரை மாநகராட்சியின் சீா்மிகு நகா் திட்டத்தில் மாசி வீதிகளில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவா் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சீா்மிகு நகா் திட்டத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதி மற்றும் மாசி வீதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை பாராட்டுக்குரியவை என்றாலும் இப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டியது அவசியமானது.
பணிகள் நடைபெறும் பகுதியில் ஏராளமான ஜவுளி நிறுவனங்கள், பலதரப்பட்ட கடைகள், உணவுப் பொருள் வியாபார நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சீா்மிகு நகா் திட்டப்பணிக்காகத் தோண்டப்பட்டு சாலையில் இருக்கும் மண் அகற்றப்படாததால் கடைகளில் இருக்கும் பொருள்களில் தூசி படிந்து அவற்றை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது.
மாசி வீதிகளில் நடைபெறக் கூடிய பணிகளைத் துரிதப்படுத்துவது குறித்து 15 நாள்களுக்கு ஒருமுறை வியாபாரிகள் சங்கத்தினரை அழைத்துப் பேசி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வரவுள்ள நிலையில் அதற்கு முன்பாக பணிகளை முடிக்க வேண்டும் என்றாா்.