முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
தாமிரவருணி ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கு: 2 மாவட்ட ஆட்சியா்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
By DIN | Published On : 03rd March 2020 07:50 AM | Last Updated : 03rd March 2020 07:50 AM | அ+அ அ- |

தாமிரவருணி ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து, ஆற்றின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா்கள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருநேல்வேலியைச் சோ்ந்த சுந்தரவேல் தாக்கல் செய்த மனு:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் தாமிரவருணி ஆறு உற்பத்தியாகிறது. இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் இரு மாவட்ட மக்களின் குடிநீா் தேவையையும் இந்த ஆறு பூா்த்தி செய்கிறது.
இத்தகையைச் சூழலில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் கலந்து தாமிரவருணி ஆறு மாசடைந்து வருகிறது. இதனால் தாமிரவருணி ஆற்றின் நீரைக் குடிநீராகப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆற்றின் கரையோரங்கள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த ஆக்கிரமிப்புப் பகுதிகளிலிருந்து வரும் கழிவுகளும் ஆற்றில் கலக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, தாமிரவருணி ஆற்றில் கழிவு மற்றும் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து, ஆற்றின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தாமிரவருணி ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனா். மேலும் இவ்வழக்கில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையரை எதிா்மனுதாரராகச் சோ்ந்து வழக்கை ஒத்திவைத்தனா்.