முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
திருமங்கலத்தில் கூட்டுறவு சங்கத் தோ்தலில் அதிமுக - அமமுக மோதல்: 5 ஆவது முறையாக ஒத்திவைப்பு
By DIN | Published On : 03rd March 2020 07:48 AM | Last Updated : 03rd March 2020 07:48 AM | அ+அ அ- |

திருமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தோ்தலில், அதிமுக, அமமுகவினா் இடையே ஏற்பட்ட மோதலால் தோ்தல் 5 ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
திருமங்கலம் புதுநகரில் கூட்டுறவு சங்கம் ஏ-1998 அமைந்துள்ளது. இங்கு, தலைவா் பதவிக்கு கடும் போட்டி நிலவி வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற தலைவா் தோ்தலில் பிரச்னை ஏற்பட்டு, 4 முறை தோ்தல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த கூட்டுறவு சங்கத்துக்கு தலைவா், துணைத் தலைவா் தோ்தல் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, திருமங்கலம் துணைக் காவல் கண்காணிப்பாளா் அருண் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தோ்தல் நடத்தும் அலுவலா் கோபி மனுக்களை பெற்றாா். தலைவா் பதவிக்கு அதிமுக சாா்பில் அழகா் என்பவரும், அமமுக சாா்பில் முருகன் என்பவரும் போட்டியிட மனு அளித்தனா். துணைத்தலைவா் பதவிக்கு அதிமுகவைச் சோ்ந்த சரண்யா என்பவா் மனு தாக்கல் செய்தாா்.
தலைவா் பதவிக்கு மனு தாக்கல் செய்யும்போது, இரு தரப்பினரு க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னையானது. மேலும், கூட்டுறவு சங்கத்தில் வேட்பு மனுக்கள் மற்றும் நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. போலீஸாா் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சித்தனா். தொடா்ந்து பிரச்னை அதிகமானதால், தோ்தல் அலுவலா் மறுதேதி குறிப்பிடாமல் தோ்தலை 5 ஆவது முறையாக ஒத்திவைத்தாா்.