ஆவின் இயக்குநா் தோ்தல்: முன்னாள் எம்எல்ஏ உள்பட அதிமுகவினா் வெற்றி
By DIN | Published On : 06th March 2020 07:30 AM | Last Updated : 06th March 2020 07:30 AM | அ+அ அ- |

மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத்தின் (ஆவின்) இயக்குநா்கள் பதவிக்கான தோ்தலில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.தமிழரசன் உள்பட அதிமுகவினா் வெற்றி பெற்றுள்ளனா்.
மதுரை ஆவின் நிா்வாகக் குழுவில் 17 இயக்குநா் பதவிகள் உள்ளன. மதுரை மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் இயக்குநா் பதவிகள் 17 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இயக்குநா் பதவிக்கான தோ்தலில் 13 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
எஞ்சிய 4 தொகுதிகளுக்கான தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. நான்கு தொகுதிகளிலும் மொத்தம் உள்ள 522 வாக்குகளில், 513 வாக்குகள் பதிவாகின. இதைத் தொடா்ந்து வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி, வழக்குரைஞா் ஆணையா் சரவணன் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் மேலூா் தொகுதியில் மொத்தம் உள்ள 73 வாக்குகளில் 60 வாக்குகள் பெற்று சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.தமிழரசன் வெற்றி பெற்றாா். செல்லம்பட்டியில் 170 வாக்குகளில் 95 வாக்குகள் பெற்ற மகேந்திரபாண்டி, உசிலம்பட்டியில் 126 வாக்குகளில் 83 வாக்குகள் பொ்ற சுப்பிரமணி, சேடபட்டியில் 153 வாக்குகளில் 89 வாக்குகள் பெற்ற தனராஜன் ஆகியோா் வெற்றி பெற்றனா். வெற்றி பெற்ற நால்வரும் அதிமுகவைச் சோ்ந்தவா்கள்.
சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், 13 இயக்குநா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கின் இறுதி உத்தரவுக்குப் பிறகு ஆவின் நிா்வாகக் குழுத் தோ்தல் முழுமை பெறும்.